உள்ளூர் செய்திகள்

விசிறி தாத்தா நடராஜன்.

சித்திரை திருவிழா: பக்தர்களுக்கு சாமரம் வீசும் மதுரை விசிறி தாத்தா

Published On 2023-05-08 08:15 GMT   |   Update On 2023-05-08 08:15 GMT
  • மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழாவில் பக்தர்களுக்கு சாமரம் வீசி தாத்தா சிவத்தொண்டாற்றி வருகிறார்.
  • அவர் மயில் தோகை விசிறியால் சாமரம் வீசி பக்தர்களின் மனதையும், உடலையும் குளிர வைப்பார்.

மதுரை

'அடியாருக்கு அடியேன்' என்பது சுந்தரமூர்த்தி நாயனாரின் வாக்கு. இதற்கு மதுரை விசிறி தாத்தா என அழைக்கப்படும் நடராஜன் உதாரணமாக திகழ்ந்து வருகிறார். இவருக்கு 93 வயதாகிறது.

மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழாவில் பக்தர்களுக்கு பக்தனாக சாமரம் வீசி, கடந்த 70 ஆண்டுகளாக நடராஜன் சிவத்தொண்டாற்றி வருகிறார்.

மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கோடை வெயிலில் தவிக்கும்போது விசிறி தாத்தா அருகில் வருவார். அவர் மயில் தோகை விசிறியால் சாமரம் வீசி பக்தர்களின மனதையும், உடலையும் குளிர வைப்பார். அதற்காக இவர் சன்மானம் பெறுவதில்லை. ஒரு புன்னகையுடன் கடந்து சென்று விடுவார்.

அதிலும் சித்திரைத் திருவிழா வந்துவிட்டால் போதும், தாத்தாவை கையில் பிடிக்க முடியாது. திருவிழா நேரத்தில் வியர்க்க விறுவிறுக்க நிற்கும் பக்தர்கள் மீது விசிறி வீசி குளிர்வித்து ஆசீர்வாதம் செய்வார்.

பக்தர்களுக்கு சாமரம் வீசும் சேவையில், விசிறி தாத்தாவுக்கு முன்னோடி சுந்தரநாயனார். தேவாரம் பாடிய நாயன்மார்களில் ஒருவர். சுந்தர நாயனாரின் 7-ம் திருமுறை, 39-வது பதிகத்தில் திருத்தொண்டத் தொகை என்ற அத்தியாயம் உண்டு. அதில் 'தொண்டர்தம் அடியார்க்கும் அடியேன்' என்ற குறிப்பு உள்ளது.

அதாவது ஒருவர் தான் செய்யும் தொழில் வாயி லாகவும் இறையடியார்க்கு தொண்டு செய்யலாம். காஞ்சிபுரத்தில் பிறந்த திருக்குறிப்புத் தொண்ட நாயனார், சிவனடியார் துணிகளை இன்முகத்தோடு சலவை செய்து அளிப்பதையே தொண்டாக எண்ணி, அதில் இன்பம் கண்டார். அடியார்க ளின் ஆடையில் உள்ள மாசு நீக்குவதால், தன் பிறப்பின் மாசு நீங்கும், அதுவே தெய்வப்பணி' என்பது அவரின் நம்பிக்கையாக இருந்தது. சிவனடியார் குறிப்பறிந்து தொண்டு செய்த திருக்குறிப்பு நாயனாரை போல், விசிறி தாத்தா இறை சேவையில் ஈடுபட்டு வருகிறார்.

மதுரை வாசிகளால் நடராஜன் விசிறி தாத்தா என்று அன்போடு அழைக்கப்பட்டு வருகிறார். அவரிடம் பேசிய போது, "நான் கடந்த 1941-ம் ஆண்டு முதல் விசிறி சேவை செய்து வருகிறேன். எனக்கு இப்போது 93 வயது ஆகிறது. இந்த மண்ணுக்கு என் உடல் போகும்வரை, விசிறி சேவையை விடாமல் செய்வேன். அனைத்து பக்தர்களும் சீரும் சிறப்புமாக இருக்க வேண்டும். அதற்காக தான் பகவான் மட்டுமின்றி என் மக்க ளுக்கும் சேவை செய்து வருகிறேன். நான் தமிழ கத்தில் கிட்டத்தட்ட அனைத்து கோவில்களுக்கும் போய் வந்து இருக்கிறேன். ஆனாலும் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலே எனக்கு தாய் வீடு. 93 வயதிலும் எதிர்பார்ப்பு இல்லாமல் தெய்வ செயலாக நினைத்து, பக்தர்களுக்கு சாமரம் வீசும் சேவை செய்து வருகிறேன். அடியார்க்கு அடியாராய் சேவை செய்ய கொடுத்து வைத்திருக்க வேண்டும்" என்கிறார்.

'மக்கள் சேவையே மகேசன் சேவை' என்று அடியார்க்கு அடியாராய், இறைபணியில் ஈடுபட்டு வரும் நடராஜனுக்கு, வயது ஒரு பொருட்டே அல்ல!.

Tags:    

Similar News