கப்பலூர் சுங்கச்சாவடியை கண்டித்து கடையடைப்பு-ஆர்ப்பாட்டம்
- கப்பலூர் சுங்கச்சாவடியை கண்டித்து கடையடைப்பு-ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
- திருமங்கலம் சர்வீஸ் சாலையை திருமங்கலம் வாகன ஓட்டிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என கோரிக்கை வலியுறுத்தப்பட்டது.
திருமங்கலம்
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே நான்கு வழிச்சாலையில் உள்ள கப்பலூர் சுங்கச்சாவடி விதிமுறைப்படி திருமங்கலம் நகராட்சி எல்லையில் இருந்து 4 கிலோ மீட்டருக்கு அப்பால் இருக்க வேண்டும். ஆனால் விதிகளை மீறி திருமங்கலம் நகராட்சி எல்லையில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் அமைக்கப்பட்டதோடு திருமங்கலம் நகர் பகுதியில் இருந்து வரக்கூடிய வாகனங்களுக்கு கட்டணம் வசூல் செய்யும் நடவடிக்கையிலும் இறங்கியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக திருமங்கலம், கல்லுப்பட்டி ,பேரையூர், ராஜபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதி வாகன ஓட்டிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் புதிதாக ஒப்பந்தம் செய்துள்ள சுங்கச்சாவடி நிர்வாகம் கடந்த 1-ந்தேதி முதல் உள்ளூர் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்க போவதாக கூறி மாதாந்திர கட்டணமாக 331 உள்ளூர் வாகனங்கள் செலுத்த வேண்டும் என அறிக்கை விடுத்து கட்டண வசூலில் இறங்கியது இதற்கு திருமங்கலம் வாகன ஓட்டிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதுெதாடர்பாக கப்பலூர் சுங்கச்சாவடி எதிர்ப்பு ஒருங்கிணைப்பு குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்ற வேண்டும் அல்லது திருமங்கலம் சர்வீஸ் சாலையை திருமங்கலம் வாகன ஓட்டிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என கோரிக்கை வலியுறுத்தப்பட்டது.
கப்பலூர் சுங்கச்சாவடி விதிமுறைக்கு புறம்பாக உள்ளதை கண்டித்தும், உள்ளூர் வாகன ஓட்டிகளுக்கு கட்டணம் வசூல் செய்யும் நடவடிக்கையை கண்டித்தும் வருகிற 22-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) திருமங்கலம் நகர் பகுதியில் உள்ள அனைத்து கடைகளையும் அடைக்க முடிவு செய்யப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் அன்றைய தினம் திருமங்கலம் தாலுகா அலுவலகத்தின் முன் சுங்கச்சாவடி நிர்வாகத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டமும் நடத்தப் போவதாக சுங்கச்சாவடி எதிர்ப்பு ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது இதற்கும் மேலாக சுங்கச்சாவடி தரப்பில் உள்ளூர் வாகன ஓட்டிகளிடம் கட்டண வசூல் செய்ய முற்பட்டால் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என போராட்டக் குழுவினர் தெரிவித்தனர்.