உள்ளூர் செய்திகள்

தற்கொலை செய்து கொண்ட தீபா-திருப்பதி.

கணவன்-மனைவி தற்கொலைக்கு கடன் பிரச்சினை காரணமா?

Published On 2023-02-08 07:35 GMT   |   Update On 2023-02-08 07:35 GMT
  • சோழவந்தான் அருகே கணவன்-மனைவி தற்கொலைக்கு கடன் பிரச்சினை காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
  • வாங்கிய கடனை உரிய நேரத்தில் கொடுக்க முடியாததால் இந்த விபரீத முடிவை எடுத்திருக்கலாம் என்று தெரியவந்தது.

சோழவந்தான்

மதுரை மாவட்டம் சோழ வந்தான் கோவிந்தம்மாள் தெருவை சேர்ந்தவர் திருப்பதி (வயது 45) டேங்கர் லாரி டிரைவர் .இவரது மனைவி தீபா (39) இவர்களுக்கு கவுதம் என்ற மகனும், ராகவி என்ற மகளும் உள்ளனர்.

ராகவிக்கு கடந்த ஜனவரி மாதம் தான் திருமணம் நடைபெற்றது. கவுதமன் சென்னையில் கேட்டரிங் படித்து வருகிறார். வீட்டில் திருப்பதியும், தீபாவும் மட்டும் வசித்து வந்தனர். திருப்பதிக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன் -மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

தற்கொலை

இந்த நிலையில் நேற்று திருப்பதியும், தீபாவும் வசித்த வீடு நீண்ட நேரமாக திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள் சத்தம் போட்டு அழைத்தும் கதவு திறக்கப்படவில்லை. இது பற்றி பொதுமக்கள் சோழவந்தான் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

அதன் பேரில் இன்ஸ்பெக்டர் சிவபாலன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கிராம நிர்வாக அலுவலர் சிவராமன் முன்னிலையில் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது மின்விசிறியில் திருப்பதியும், தீபாவும் ஒரே சேலையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து பிணமாக தொங்கியது தெரியவந்தது.

கடன் பிரச்சினை

அவர்கள் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சோழவந்தான் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக சோழவந்தான் போலீசார் வழக்குப்பதிவு செய்து கணவன்-மனைவி தற்கொலை செய்ய என்ன காரணம்? என்பது தொடர்பாக விசாரணை நடத்தினர்.

இதில் அவர்கள் தங்களது மகள் திருமணத்திற்கு வாங்கிய கடனை உரிய நேரத்தில் கொடுக்க முடியாததால் இந்த விபரீத முடிவை எடுத்திருக்கலாம் என்று தெரியவந்தது. அதன் அடிப்படையில் திருப்பதி மற்றும் தீபாவின் உறவினர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags:    

Similar News