உள்ளூர் செய்திகள் (District)

மதுரை ரெயில் நிலையத்தில் விரிவாக்க பணிகள் நடந்து வருகிறது.

மதுரை ரெயில் நிலையத்தில் பழைய கட்டிடங்களை இடிக்க முடிவு

Published On 2023-02-15 09:03 GMT   |   Update On 2023-02-15 09:03 GMT
  • மதுரை ரெயில் நிலையத்தில் பழைய கட்டிடங்களை இடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
  • ரூ.375 கோடி மதிப்பீட்டில் மறு சீரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன.

மதுரை

மதுரை ரெயில் நிலையத்தில் ரூ.375 கோடி மதிப்பீட்டில் மறு சீரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன. இங்கு விமான நிலையத்தில் உள்ள வசதிகளுக்கு இணையாக உலக தரத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன. இதற்கு வசதியாக தற்போது மதுரை ரெயில் நிலையத்தில் தற்காலிக பணியிட அலுவலகம், ஒப்பந்ததாரர் அலுவலகம், திட்ட மேலாண்மை அலுவலகம் ஆகியவை தொடங்கப்பட்டு உள்ளன.

ரெயில் நிலையத்தின் கிழக்குப் பகுதியில் வேலிகள் அமைக்கப்பட்டு உள்ளன. அங்கு பழைய கட்டிடங்களை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்டும் பணி நடந்து வருகிறது. இன்னொரு புறம் ரெயில் நிலைய பஸ் நிறுத்தத்தை வேறு பகுதிக்கு மாற்றும் வேலைகள் தொடங்கி உள்ளன.

மதுரை ரெயில் நிலைய கிழக்கு- மேற்கு நுழைவு வாயிலில் இரு முனையங்கள், 3 அடுக்கு வாகன காப்பகங்கள், கிழக்கு- மேற்கு பகுதிகளை இணைத்து ரெயில் பாதை மேல் காத்திருப்பு அரங்கு ஆகியவற்றுக்கான பணிகளும் தொடங்கி நடந்து வருகின்றன.

மதுரை-திருமங்கலம் இடையேயான இரட்டை ரெயில் பாதையில் 2-வது வழித்தடம் அமைக்கப்பட்டு உள்ளது. இது மின்மயமாக்கப்பட்ட ரெயில் பாதை ஆகும்.

இங்கு தலைமை முதன்மை மின் பொறியாளர் சித்தார்த்தா சிறப்பு ரெயில் மூலம் குழுவுடன் சென்று மின்மய பாதைகளை ஆய்வு செய்தார். அப்போது வழியில் உள்ள பாலங்கள், ரெயில்வே கேட்டுகள் ஆகியவற்றில் மின்சார வழங்கல் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.

ரெயில் நிலையங்கள் மற்றும் முக்கிய இடங்களில் மின்தடம் பற்றிய எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டு உள்ளதா? அங்கு பணியாற்றும் ரெயில் பாதை பராமரிப்பு பணியாளர்கள் உரிய பயிற்சி எடுத்து உள்ளனரா? என்பதும் உறுதி செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து புதிய மின் தடத்தில் 25 ஆயிரம் வோல்ட் மின்சாரம் பாய்ச்சப்பட்டு ரெயில் இயக்கப்பட்டது. அப்போது முதன்மை மின் வழங்கல் துறை பொறியாளர் சுந்தரேசன், ரெயில் விகாஸ் நிகம் லிமிடெட் முதன்மை திட்ட மேலாளர் கமலாகரரெட்டி, மின்துறை மேலாளர் ராமநாதன், மதுரை கோட்ட ரெயில்வே மேலாளர் பத்மநாபன் அனந்த் ஆகியோரும் ரெயிலில் பயணம் செய்தனர்.

மதுரை-திருமங்கலம் இடையே இரட்டை ரெயில் பாதைகள் அமைக்கப்பட்டு விட்டன. எனவே அங்கு எக்ஸ்பிரஸ் மற்றும் பாசஞ்சர் ரெயில்களின் வேகத்தை அதிகரிப்பது என்று ரெயில்வே அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர். 

Tags:    

Similar News