- 1000 ஆண்டுகளுக்கு முந்தைய சமணர் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது.
- இவ்வழக்கம் 10-ம் நூற்றாண்டுவரை தொடர்ந்தது என்பதற்கு இப்போதைய திருப்ப ரங்குன்றம் கல்வெட்டு கண்டுபிடிப்பு சான்றாக அமைகிறது.
திருப்பரங்குன்றம்
திருப்பரங்குன்றம் மலை மேல் சிக்கந்தர் தர்காவின் பின்புறம் உள்ள மலைச்சரிவில் 1000 ஆண்டுகளுக்கு முற்பட்ட சமணத்துறவியர் வடக்கிருந்து உயிர் நீத்த செய்தியை கூறும் கல்வெட்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இக்கல்வெட்டு கிரந்தமும் தமிழும் கலந்து எழுதப்பட்டு ள்ளது.
இதனைப் பாண்டி யநாட்டு வரலாற்று ஆய்வு மையத்தின் ஆய்வாளர்கள் உதயக்குமார், முத்துபாண்டி, முருகன் ஆகியோர் கண்டுபிடித்துள்ளனர். அரிட்டநேமிபடாரர் என்னும் சமணத்துறவி சல்லேகனை என்று கூறப்படும் வடக்கிருந்து நோன்பு நோற்று உயிர்நீத்த இடம் என்பதைக் இக்கல்வெட்டு குறிப்பிடுகிறது. அரிட்டநேமிபடாரர் நிசிதிகை இது' என்பது இக்கல்வெட்டின் பாடம். முன் இரண்டு வரிகளில் தொடக்கம் சேதம் அடைந்துள்ளதால் எத்தனை நாள் நோன்பு இருந்தார் என்பதை அறிய முடியவில்லை.
40 அல்லது 50 என்று நாட்கள் இருக்கலாம் முன்னெழுத்துக்கள் இல்லாமல் பது என்ற 2 எழுத்துக்கள் மட்டும் இருப்பதால் 20 முதல் 80 வரையான நாட்களை குறிக்கலாம். நிசிதிகை என்ற சொல் இக்கல்வெட்டில் இடம் பெற்றுள்ளது.
பாண்டியநாட்டில் இந்த சொல் கல்வெட்டுகளில் இதுவரை இடம் பெற்றதி ல்லை. தொண்டைமண்டலம் (திருநாதர்குன்று) கொங்குமண்டலம் (விசயமங்கலம்) ஆகிய ஊர்களில் இப்படிப்பட்ட நிசிதிகை கல்வெட்டுகள் கிடைத்துள்ளன. பாண்டியநாட்டில் இதுவே முதலாவதாக அறியப்பட்டு ள்ளது.
செஞ்சிக்கு அருகில் உள்ள திருநாதர்குன்று மலையில் 57 நாட்கள் உண்ணா நோன்பிருந்து உயிர்நீத்த சந்திரநந்தி எனும் துறவியின் நிசிதிகை உள்ளது. அதன் காலம் கி.பி. 6-ம் நூற்றாண்டாகும்.
திருப்பரங்குன்றம் சங்ககாலத்திலேயே முக்கிய சமணத்தளமாக விளங்கியுள்ளது. மூன்று தமிழ்பிராமிக் கல்வெட்டுகள் கி.மு. முதல்நூற்றாண்டைச் சேர்ந்தவை இங்கு காணப்படுகின்றன. அதற்கு அடுத்து கி.பி. 8,9-ம் நூற்றாண்டில் தென்பரங்குன்றம் குடைவரைக்கோவில் சமணத்தீர்த்தங்கரர்க்காக எடுக்கப்பட்டது. பின்னர் கி.பி. 13ம் நூற்றாண்டில் அது சிவன்கோவிலாக மாற்றம் பெற்றது. மதுரைக்கு அருகில் சமணம் செல்வாக்குப் பெற்றிருந்த எண்பெருங்குன்றங்களில் திருப்பரங்குன்றம் முதலாவதாகும். மலை உச்சியில் காசிவிசுவநாதர் கோயில் அருகில் மலைப்பாறையில் கி.பி. 9,–10ம் நூற்றாண்டைச் சேர்ந்த சமணத்துறவியரின் உருவங்கள் செதுக்கப்பட்டு ள்ளன.
மலை அடிவாரத்தில் உள்ள பழனிஆண்டவர் கோவிலின் பின்புறம் ஒர் இயற்கையான சுனைக்கு அருகில் இரண்டு பார்ச்சுவநாதர், மகாவீரர் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இவற்றைச் செதுக்கி யவர்களின் பெயர்களும் கி.பி.10ஆம் நூற்றாண்டின் வட்டெழுத்தில் வெட்டப்பட்டுள்ளன.இவ்வளவு சமணத்தொடர்பு டைய திருப்பரங்குன்றத்தில் முதல்முறையாக நோன்பிருந்து உயிர்நீத்த அரிட்டநேமிப்பெரியார் பற்றிய கல்வெட்டு கிடைத்திருப்பது முக்கி யத்துவம்வாய்ந்ததாகும். மதுரைக்கு அருகில் உள்ள அரிட்டாபட்டி என்னும் சமணத்தலம் அரிட்டநேமிப் பெரியாரின் பெயரில் அமைந்தது என்பர். இவரே அப்பெயருக்குக் காரணமானவராக இருக்கலாம்.
தமிழகத்தில் சங்க காலத்திலேயே வடக்கிருந்து உயிர் போக்கும் வழக்கம் இருந்தது என்பதனை கோப்பெருஞ்சோழன் பிசிராந்தையார் வரலாறு கூறுகிறது. இவ்வழக்கம் 10-ம் நூற்றாண்டுவரை தொடர்ந்தது என்பதற்கு இப்போதைய திருப்ப ரங்குன்றம் கல்வெட்டு கண்டுபிடிப்பு சான்றாக அமைகிறது.
மேற்கண்ட தகவலை பாண்டியநாட்டு வரலாற்று ஆய்வு மையத்தின் செயலாளர் தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் தெரிவித்தார்.