மாமன்ற உறுப்பினர் நிதியை உயர்த்தக்கோரி தி.மு.க. கவுன்சிலர்கள் மேயருடன் வாக்குவாதம்
- மாமன்ற உறுப்பினர் நிதியை உயர்த்தக்கோரி தி.மு.க. கவுன்சிலர்கள், மேயருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
- மாநகராட்சி கூட்டத்தில் பரபரப்பான விவாதம் நடந்தது.
மதுரை
மதுரை மாநகராட்சி பட்ஜெட் விவாத கூட்டம் மேயர் இந்திராணி தலைமையில் துணைமேயர் நாகராஜன், மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன்ஜீத்சிங் ஆகியோர் முன்னிலையில் இன்று நடந்தது.
கூட்டத்தில் தி.மு.க. மாமன்ற குழு தலைவர் ஜெயராமன் பேசும்போது, எங்களுக்கு உரிய இருக்கை வசதி செய்துதர வேண்டும் என்றார்.
அவரை தொடர்ந்து மாமன்ற குழு துணைத் தலைவர் செந்தாமரை கண்ணன் உள்ளிட்டோர் இருக்கை கேட்டு பிரச்சினை செய்தனர். 92-வது வார்டு தி.மு.க. உறுப்பினர் கருப்புசாமி பேசும்போது, இது உள்கட்சி பிரச்சினை. இங்கு மக்கள் பிரச்சினையை மட்டும் தான் பேச வேண்டும் என்றார். இதனால் தி.மு.க. மாவட்ட உறுப்பினர்கள் இரு பிரிவுகளாக பிரிந்து ஒருவருக்கு ஒருவர் விவாதம் செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
மேயருடன் தி.மு.க. கவுன்சிலர்கள் வாக்குவாதம் செய்தனர்.
காங்கிரஸ் உறுப்பினர் கார்த்திகேயன் பேசும்போது, மக்கள் பிரச்சினையை மாமன்ற கூட்டத்தில் பேசுங்கள். வேறு பிரச்சி னையை தனியாக மேயரிடம் சென்று கூறுங்கள் என தெரிவித்தார். உடனே அவரை எதிர்த்து ஒரு தி.மு.க. கவுன்சிலர், "நீங்கள் மட்டும் மாமன்ற கூட்டத்திற்குள் ராகுல்காந்தி படத்தை கொண்டு வந்து பேசியது எந்த வகையில் நியாயம்? என ஒருமையில் பேசியதால் சலசலப்பு அதிகமானது.
இரு தரப்பையும் சமாதானம் செய்ய மேயர் எவ்வளவோ முயற்சித்தும் முடியவில்லை. சுமார் 1 மணி நேரம் மேயருடன் தி.மு.க. கவுன்சிலர்கள் அருகில் வந்து வாக்குவாதம் செய்தனர்.
முடிவில் மேயர் பேசும்போது, உறுப்பினர்கள் அனைவரும் தங்களது இருக்கைக்கு செல்ல வேண்டும். இல்லை என்றால் காவலர்களை வைத்து வெளியேற்ற செய்ய வேண்டியது இருக்கும் என எச்சரிக்கை விடுத்தார். அதன் பின்னர் அனைவரும் அவரவர் இருக்கைக்கு சென்று அமர்ந்தனர்.
பின்னர் பட்ஜெட் தொடர்பான விவாதம் நடந்தது.
67-வது வார்டு உறுப்பினர் நாகநாதன் பேசும்போது, விராட்டிபத்து பகுதியில் சாலை வசதி சரியில்லை. அந்த பகுதியில் பாலம் கட்டும் பணியை செய்த தனியார் நிறுவனம் சாலைகளை சேதப்படுத்தி விட்டது. மேலும் எச்.எம்.எஸ்.காலனி பகுதியில் பாதாள சக்கரை வசதி போன்றவை செய்து தர வேண்டும்.
அவரை தொடர்ந்து பேசிய 64-வது வார்டு உறுப்பினரும், எதிர்க்கட்சி தலைவருமான சோலை ராஜா பேசும்போது, மதுைரயைவிட குறைந்த வருவாய் ஈட்டக்கூடிய கோயம்புத்தூர் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்களுக்கு மேம்பாட்டு நிதியாக ரூ.50 லட்சம் ஒதுக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் மதுரை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த தொகை குறைவாக உள்ளதால் அதனை தலா ரூ.25 லட்சமாக உயர்த்த வேண்டும் என்றார்.