விவசாய நிலத்தில் மழைநீர் தேங்குவதால் விவசாயிகள் அவதி
- விவசாய நிலத்தில் மழைநீர் தேங்குவதால் விவசாயிகள் அவதியடைந்துள்ளனர்.
- கலெக்டர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சோழவந்தான்
சோழவந்தான் அருகே மேலக்கால் ஊராட்சியில் கீழ மட்டையான் கிராமம் உள்ளது. இங்கு சுமார் 200 ஏக்கர் பரப்பில் கண்மாய் உள்ளது. இதன் கிழக்கு பகுதியில் சுமார் ஆயிரம் ஏக்கர் விவசாயம் நடைபெறு கிறது. இங்கு கன்மாய் கரையில் இருந்து மெயின் ரோடு செல்வதற்கு சிறிய பாலம் அமைக்கப்பட்டது இதன் அருகே உயரம் குறைவாக தடுப்பணை கட்டப்பட்டது.
இந்த நிலையில் தற்போது அந்த தடுப்பணையின் உயரம் மேலும் 3 அடி உயர்த்தப்பட்டது. தற்போது பெய்த கனமழையில் கண்மாயில் தண்ணீர் பெருகியதால் தடுப்பணை வழியாக சிறிதளவே தண்ணீர் செல்கிறது. இதனால் தடுப்பணை பகுதியில் சேரும் தண்ணீர் நிரம்பி அருகில் உள்ள வயல்களுக்கு செல்கிறது. இதனால் வயல்கள் மழை தண்ணீரால் மூழ்கி இருக்கிறது. ஓரிரு நாட்கள் பெய்த மழைக்கே வயல்கள் தண்ணீரில் மூழ்கிவிட்டன.
மேலும் தடுப்பணை பகுதியில் தண்ணீர் நிரம்பினால் மலைப்பட்டி கிராமத்திற்குள் தண்ணீர் புகுந்து விடக்கூடிய வாய்ப்பு உள்ளதாகவும், மேலும் தென்கரை கழிவு நீர் வாய்க்காலில் இருந்தும் தண்ணீர் வந்தால் விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்படும் என இந்தப் பகுதி விவசாயிகள் கூறுகின்றனர்.
அவர்கள் மேலும் கூறியதாவது:
தடுப்பணையின் உயரத்தை அதிகப்படுத்த திட்டமிட்ட போதே வயல்களில் தண்ணீர் புகுந்து சேதம் ஏற்படும் என அதிகாரிகளிடம் முறையிடோம். ஆனால் அதிகாரிகள் அதனை கண்டுகொள்ள வில்லை என்றும். தற்போது வயல்களில் தண்ணீர் தேங்கி இருப்பது குறித்தும் அதிகாரிகளிடம் கூறியுள்ளோம். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
எனவே மாவட்ட கலெக்டர் இந்த தடுப்பணையையும், நீரில் மூழ்கிய விவசாய நிலங்களையும் நேரில் பார்வையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.