பாசன கால்வாயை போர்க்கால அடிப்படையில் தூர்வார விவசாயிகள் கோரிக்கை
- சோழவந்தானில் பாசன கால்வாயை போர்க்கால அடிப்படையில் தூர்வார வேண்டும்.
- விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சோழவந்தான்
மதுரை மாவட்டம் சோழவந்தான் விவசாய பூமியாகும். இங்கு முல்லை பெரியாறு பாசன நீர் மூலம் 3 போகம் நெல் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. மதுரை மாவட்டத்தின் களஞ்சியமாக விளங்கும் சோழவந்தானில் பொதுப்பணித்துறை அதி காரிகளின் மெத்தனத்தால் விவசாயம் பாதிக்கப்படும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
சோழவந்தானில் உள்ள வடகரை கண்மாயில் இருந்து வைகை ஆறு வரை 40அடி கால்வாய் முற்றிலும் தூர்ந்துபோய் உள்ளது. இதனால் அந்த பகுதியில் உள்ள 200 ஏக்கருக்கு மேற் பட்ட விவசாய நிலங்கள் தண்ணீர் வசதி பெறமுடியாமல் உள்ளன. மேற்கண்ட கால்வாயை தூர்வார வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.
ஆனால் எந்த நட வடிக்கையும் எடுக்கப்படாததால் 200 ஏக்கர் விவசாய நிலங்கள் தரிசு நிலங்களாக மாறும் அவலம் ஏற்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் விவசாய நிலங்களை வாங்க வலை விரித்து வருகின்றன.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், கடந்த ஆண்டு மழையின்போது ஏற்பட்ட பாதிப்பை பார்வையிட வந்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் 40 அடி கால்வாயை தூர்வாரி தருவதாக உறுதி அளித்தனர். ஆனால் ஒரு ஆண்டு ஆகியும் இதுவரை நடவடிக்கை இல்லை.
இதனால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது.
எனவே இதுதொடர்பாக அமைச்சர் மற்றும் கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.