அரசு ஊழியர்கள் தற்செயல் விடுப்பு போராட்டம்
- மதுரை மாவட்டத்தில் அரசு ஊழியர்கள் தற்செயல் விடுப்பு போராட்டம் நடத்தினர்.
- பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது.
மதுரை
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டத்தில் தற்செயல் விடுப்பு போராட்டம் இன்று நடத்தப்பட்டது.
அப்போது தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க நிர்வாகிகள் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள்.
புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், முடக்கி வைக்கப்பட்டு உள்ள ஒப்படைப்பு விடுப்பு ஊதியத்தை மீண்டும் வழங்க வேண்டும். நிலுவையில் உள்ள பணியிடங்களை காலமுறை ஊதியத்தில் நிரப்ப வேண்டும்,
அமைச்சுப் பணியாளர் ஊதிய முரண்பாடுகளைக் களையும் வகையில் அரசாணை வெளியிட வேண்டும். மத்திய அரசுக்கு இணையாக தமிழக பொதுத்துறை ஊழியர்களுக்கும் ரூ.7000 போனஸ் வழங்க வேண்டும்,
தரம் உயர்த்தப்பட்ட மாநகராட்சி-நகராட்சி பகுதியில் ஈட்டுப்படியை உயர்த்தி வழங்க வேண்டும், மகப்பேறு விடுப்பில் பாரபட்ச நடவடிக்கையை கைவிட வேண்டும்.
எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டத்தில் உள்ள பணியாளர்களை பணிநிரந்திரம் செய்ய வேண்டும். மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்கள், துப்புரவு பணியாளர், தூய்மைக் காவலர்களுக்கு கொரோனா ஊக்கத்தொகை ரூ.15 ஆயிரம் வழங்க வேண்டும், காப்பீட்டுத் திட்ட குறைபாடுகளை களைய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் அரசு ஊழியர்கள் சங்க கூட்டு நடவடிக்கைக்குழு மாவட்ட ஒருங்கிணைப்பு செயலாளர் மாரியப்பன், நடராஜன், ஜெயராஜராஜேஸ்வரன், 'டான்சாக்' மனோகரன், பரஞ்ஜோதி, மணிகன்டன், சின்னபொன்னு உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.