உள்ளூர் செய்திகள்

பறக்கும் மேம்பாலம் திறப்பு: மதுரையில் போக்குவரத்து மாற்றம் அமல்

Published On 2023-04-08 08:08 GMT   |   Update On 2023-04-08 08:08 GMT
  • நத்தம் சாலையில் பறக்கும் மேம்பாலம் இன்று மாலை திறக்கப்படுவதால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
  • மேற்கண்ட தகவலை மதுரை மாநகர போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.

மதுரை

மதுரை-நத்தம் சாலையில் பறக்கும் மேம்பாலம் இன்று மாலை திறக்கப்படுகிறது. பிரதமர் மோடி காணொலி மூலம் திறந்து வைக்கிறார். இதைத்தொடர்ந்து அந்தப் பகுதியில் போக்கு வரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

நத்தம் சாலையில் ஊமச்சிக்குளம் செல்ல கோகலே ரோடு வழியாக விஷால்மால் முன்புள்ள பாலத்தில் ஏறி செல்ல வேண்டும். அய்யர் பங்களா, திருப்பாலை, ஊமச்சிகுளம் செல்லும் வாகனங்கள், இந்த மேம்பாலம் வழியாக சென்று 2.5 கி.மீ தொலைவில் உள்ள இறங்குபாதை வழியாக பேங்க் காலனி சந்திப்பை அடையலாம்.

நத்தம் சாலையில் ஐ.ஓ.சி சந்திப்பு, பீ.பீ.குளம், தபால் தந்தி நகர், எஸ்.பி. பங்களா சந்திப்பு, ரிசர்வ் லைன், ஆத்திகுளம், நாராயணபுரம் செல்ல வேண்டிய வாகனங்கள், பாலத்தின் மீது ஏறாமல் இடதுபுறம் உள்ள சாலை வழியாக விஷால்மால், ஐ.ஓ.சி ரவுண்டானா வழியாக பாலத்தின்கீழ் செல்லலாம்.

அழகர்கோவில், புதூர், மாவட்ட கோர்ட்டு, கே.கே.நகர், மாட்டுத்தாவணி, வழியாக செல்லும் சிறிய வாகனங்கள் நவநீத கிருஷ்ணன் கோவில் சாலை, பழைய அக்ரகாரம் தெரு, அப்துல் கபார்கான் சாலை, லாலா லஜபதிராய் சாலைகளை பயன்படுத்தி, பி.டி.ஆர்.சிலை வழியாக பாண்டியன் ஓட்டல், அழகர்கோவில் செல்ல வேண்டும்.

மாட்டுத்தாவணி, கே.கே.நகர், டாக்டர் தங்கராஜ் சாலை வழியாக வரும் வாகனங்கள் கக்கன் சிலை சந்திப்பில் வலதுபுறம் செல்லக்கூடாது. மதுரை மாநகராட்சி அலுவலகம் முன்பு திரும்பி செல்லும் வசதியை பயன்படுத்தி ரேஸ்கோர்ஸ் வழியாக அழகர்கோவில் சாலையை அடையலாம்.

மேற்கண்ட தகவலை மதுரை மாநகர போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News