உள்ளூர் செய்திகள்

வாகன பதிவு எண் எழுதுவதில் விதிமீறல்; மதுரையில் 1,699 வழக்குகள் பதிவு

Published On 2023-02-10 09:22 GMT   |   Update On 2023-02-10 09:22 GMT
  • வாகன பதிவு எண் எழுதுவதில் விதிமீறல்; மதுரையில் 1,699 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.
  • ஒரே நாளில் ரூ.35ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

மதுரை

மதுரை மாவட்டத்தில் 5 லட்சத்துக்கும் அதிக மான வாகனங்கள் இயக்கப்படுகிறது. அவற்றுக்கான வாகன பதிவெண் பலகையில் எழுத்துக்கள் இப்படித்தான் இடம்பெற வேண்டும் என்று மோட்டார் வாகனச்சட்டம் வரையறுத்துள்ளது.

அதன்படி 70 சிசி-க்கு அதிகமான மோட்டார் சைக்கிள்களின் முன்புறம், 3.0 மிமீ உயரம்- 5 மி.மீ தடிமன்- 5 மி.மீ இடைவெளியுடன் கூடிய எழுத்துகள் மற்றும் எண்கள் இடம் பெற்றிருக்க வேண்டும்.

அதேபோல வாகனங்க ளின் பின்புறம் 35 மி.மீ உயரம், 7 மி.மீ தடிமன், 5 மி.மீ இடைவெளியுடன் கூடிய எழுத்துகளும், 40 மி.மீ உயரம், 7 மி.மீ தடிமன், 5 மி.மீ இடைவெளியுடன் கூடிய எண்கள் இடம்பெற்றிருக்க வேண்டும். 4 சக்கர வாகனங்களில் முன்புறமும், பின்புறமும் 65 மி.மீ உயரம், 10 மி.மீ தடிமன், 10 மி.மீ இடைவெளியுடன் கூடிய எழுத்துகள் அமைய வேண்டும்.

சொந்த வாகனமாக இருந்தால் வெள்ளை பலகையில் கறுப்பு நிறத்திலும், வணிக வாகனமாக இருந்தால் மஞ்சள் பலகையில் கறுப்பு நிறத்திலும் எழுத்துகள் இருக்க வேண்டும். அவை தெளிவாக இருப்பது கட்டாயம். ஆனால் மதுரை மாவட்டத்தில் வலம் வரும் பெரும்பாலான வாகனங்களின் பதிவு எண் பலகையில், எண் கணிதப்படி ராசியான எண்ணை பெரிதாகவும் மற்றவற்றை சிறியதாகவும் எழுதுகின்றனர்.

தமிழ் ஆர்வலராக காட்டிக் கொள்ள, தூய தமிழில் பதிவெண் எழுதுகின்றனர்.

அடுத்தபடியாக கட்சி சின்னம், கத்தி, வீச்சரிவாள், துப்பாக்கி, சினிமா நடிகர்கள் மற்றும் சுவாமி ஆகிய படங்கள் ஒட்டப்படுகிறது. அரசு அதிகாரிகள் பணியாற்றும் துறையை எழுதுகின்றனர். பதிவெண்ணில் முதல் 3 இலக்கம் 0 ஆக இருந்தால், அதைச்சேர்த்து எழுதாமல் 4-வதாக உள்ள எண்ணை மட்டும் பெரிதாக எழுது கின்றனர். 8055 என்ற எண்ணை BOSS என்று எழுதுகின்றனர்.

மோட்டார் வாகனச் சட்டத்தில் வழங்கப்பட்ட வரன்முறைகளைத் தாண்டி பதிவெண் பலகையில் இடம்பெறும் கூடுதலான எழுத்து கூட விதிமீறல் தான். அதன்படி முதல் முறை என்றால் ரூ.500 அபராதம் விதிக்க முடியும்.

அபராதம் என்பதற்கும் மேலாக விபத்து நேரும் பட்சத்தில் பதிவெண் தெளிவாக இருந்தால் மட்டுமே, சம்பவத்தில் பாதிக்கப்பட்ட, பாதிப்பை ஏற்படுத்திய நபர் பற்றிய விபரம் தெரியவரும். ஆனால் வாகன ஓட்டிகள் பலர் விதிமுறைகளை கண்டு கொள்வது இல்லை. பதிவெண் போர்டை விளம்பரம்- அறிவிப்பு பலகையாக பயன்படுத்தி வருகின்றனர். இதில் பொதுமக்கள் மட்டுமின்றி அரசியல் பிரமுகர்கள், அரசு அதிகாரிகளும் விதிவிலக்கு அல்ல.

எனவே வாகன பதிவுஎண் பலகையில் விதிகளை மீறி பதிவு செய்வோர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் நரேந்திரன் நாயர் உத்தரவிட்டார். அதன்படி மதுரை மாநகரில் போக்குவரத்து உதவி கமிஷனர் மாரியப்பன், செல்வின் ஆகியோர் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மாநகரம் முழுவதும் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். போக்குவரத்து போலீசாரின் வாகன பதிவு எண் பலகை அதிரடி சோதனை கடந்த ஒரு வாரமாக நடந்து வருகிறது.

அதன்படி இதுவரை 1699 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மதுரை மாநகர் தல்லாகுளம் சரகம் ஆகிய பகுதிகளில் நேற்று போக்குவரத்து போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில் ஒரே நாளில் 735 வாகனங்கள் சிக்கின. சம்பந்தப்பட்ட வாகன ஓட்டிகளிடம் தலா ரூ. 500 அபராதம் விதிக்கப்பட்டது. இந்த வகையில் மட்டும் ஒரே நாளில், ரூ. 35 ஆயிரம் அபராதத்தொகை வசூலாகி உள்ளது.

அடுத்தபடியாக தகுதிச்சான்று பெற வருவோர் வாகனங்களில் இதுபோன்ற விதிமீறல் இருந்தால் சான்று வழங்கக்கூடாது என்று வட்டார போக்குவரத்து அதிகாரிகளுக்கு உத்தர விடப்பட்டுள்ளது.

Tags:    

Similar News