- அரசு பெண் அலுவலரிடம் நகை பறித்தவரை சி.சி.டி.வி. காமிரா பதிவு மூலம் போலீசார் பிடித்தனர்.
- இதுகுறித்து திடீர்நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் காசிராஜன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மதுரை
மதுரை விளாங்குடியை சேர்ந்தவர் முத்துமாரி (32). இவர் தமுக்கத்தில் உள்ள பள்ளி கல்வித்துறை அலுவலகத்தில் கணக்காள ராக வேலை பார்த்து வருகிறார்.
கடந்த 15-ந்தேதி மொபட்டில் முத்துமாரி தத்தனேரி பாலத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்த மர்ம நபர் முத்துமாரி அணிந்திருந்த 5 பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பினான்.
இதுகுறித்து செல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவம் நடந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. காமிரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.
அதன் அடிப்படையில் போலீசார் நடத்தி விசா ரணையில், முத்துமாரியிடம் நகையை பறித்தது நாகமலை புதுக்கோட்டையை சேர்ந்த சிவபாண்டி (37) என தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் வீட்டிற்கு சென்று கொள்ளையனை கைது செய்தனர்.
மூதாட்டியிடம் கைவரிசை
மதுரை தனக்கன் குளத்தை சேர்ந்தவர் ரங்க ராஜ் மனைவி ராதாபாய் (62). இவர் சம்பவத்தன்று அண்ணா பஸ் நிலையத்தில் இருந்து அரசு பஸ்சில் பெரியார் பஸ் நிலையம் வந்தார். பஸ்சில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி ராதாபாய் வைத்திருந்த 3 பவுன் நகை, ரூ.5 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மர்ம நபர் அபேஸ் செய்து விட்டார்.
இதுகுறித்து திடீர்நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் காசிராஜன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.