அலுவலக நேரங்களில் நெரிசலில் திணறும் காளவாசல், அரசரடி சிக்னல்கள்
- அலுவலக நேரங்களில் காளவாசல், அரசரடி சிக்னல்களில் வாகன ஓட்டிகள் நெரிசலில் சிக்கி திணறுகின்றனர்.
- இடியாப்ப சிக்கலுக்கு தீர்வு எப்போது கிடைக்கும் என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
மதுரை
மதுரை மாநகரின் மிக முக்கிய சிக்னல்களில் ஒன்று காளவாசல். மதுரையின் நான்கு புறங்களிலும் இருந்தும் வரும் வாகனங்களின் முக்கிய சந்திப்பாக காளவாசல் சந்திப்பு உள்ளது.
பைபாஸ் ரோட்டில் அமைந்திருப்பதால் எந்த நேரத்திலும் வாகன போக்குவரத்து இருந்து கொண்டே இருக்கும். குறிப்பாக மேற்கு பகுதிகளில் இருந்தும், பெங்களூர் 4 வழிச்சாலை யில் இருந்தும், அச்சம்பத்து, துவரிமான் வழியாக வரும் வாகனங்கள் காளவாசல் சந்திப்பை கடந்தே நகருக் குள் செல்ல வேண்டும்.
மேலும் கேரளா, கம்பம், தேனி, உசிலம்பட்டி பகுதிகளில் இருந்து அரசு மற்றும் தனியார் பஸ்கள் ஆரப்பாளையம் பஸ் நிலையத்திற்கு செல்வதற்கு காளவாசல் சிக்னலை கடந்தே செல்ல வேண்டும்.
இந்த நிலையில் முடக்குச்சாலையில் இருந்து காளவாசல் சிக்னல் வரை பெரும்பாலான நேரங்களில் போக்குவரத்து நெரிசல் இருந்து கொண்டே இருக்கிறது. மேலும் சிக்னலின் அருகிலேயே ஷேர் ஆட்டோக்கள் வரிசையாக ரோட்டை மறித்து நிறுத்தப்படுகின்றன. இதனாலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இந்த நிலையில் கடந்த ஆட்சி காலத்தில் காளவாசல் சிக்னலில் கூட்டல் குறியீடு வடிவில் பாலம் அமைக்க திட்டமிடப்பட்டது. ஆனால் பல்வேறு காரணங்களால் அந்த திட்டம் மாற்றியமைக்கப்பட்டு பைபாஸ் ரோட்டில் மட்டும் சிக்னலை கடந்து செல்லும் வகையில் பாலம் அமைக்கப்பட்டது. ஆனால் அந்த பாலத்தை பயன்படுத்தும் வாகனங்களில் எண்ணிக்கை எதிர்பார்க்கப்பட்டதை காட்டிலும் குறைவாகவே உள்ளதாக அந்த பகுதி மக்கள் தெரிவித்து வந்தனர். சிக்னல் இருந்தபோதும் பாலத்தின் கீழ் பகுதியில் செல்வதையே வாகன ஓட்டிகள் விரும்பினர்.
இந்த நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்பு முடக்குச்சாலையில் இருந்து 4 வழிச்சாலைக்கு எளிதாக செல்லும் வகையில் பாலம் அமைக்கும் பணிகள் தொடங்கின. இதனால் போக்குவரத்து நெரிசல் மேலும் அதிகமானது. இதை யடுத்து காளவாசல் சிக்னலில் இரும்பு தடுப்புகள் வைக்கப்பட்டு பொன்மேனி பைபாஸ்ரோட்டில் இருந்து குரு தியேட்டர் வழியாக செல்லும் வாகனங்கள் பாலத்தின் மீது செல்லும் வகையில் போக்குவரத்து மாற்றியமைக்கப்பட்டது. அதன் பிறகும் பல வாகன ஓட்டிகள் சிக்னலில் காத்திருந்து பாதசாரிகள் செல்லும் பாதையில் சென்று ஆரப்பாளையம் ரோட்டிற்கு சென்று வருகின்றனர். இதனால் போக்கு வரத்துக்கும், பாதசாரிகளுக்கும் இடையூறு ஏற்படுகிறது.
மேலும் மேற்கு பகுதியில் இருந்து வரும் ஆம்புலன்சுகள் காளவாசல் சிக்னலில் இருந்து இடதுபுறம் திரும்பி ஆரப்பாளையம்-செல்லூர் பாலம் வழியாகவும், மத்திய சிறைச்சாலை வழியாகவும் அரசு ஆஸ்பத்திரிக்கு எளி தாக செல்ல முடியும். ஆனால் அரசரடி சிக்னல் பகுதி குறுகியதாக இருப்பதால் அங்கும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் நேரங்களில் ஆம்புலன்சுகள் சிக்னலை கடப்பது பெரும் சிரமமாக உள்ளது. சிக்னல் அருகே பயன்பாட்டில் இல்லாத கட்டிடத்தை அப்புறப்படுத்தி அந்த பகுதியில் ஏற்படும் நெரிசலுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.
மேலும் போக்குவரத்து போலீசார் சிக்னலை மாற்றியோ அல்லது வாகனங்களை ஒழுங்குப்படுத்தியோ ஆம்புலன்சுகளை கடந்து செல்ல வைக்க வேண்டிய நிலை உள்ளது. இந்த நிலையில் காளவாசலில் இருந்து மேற்கு பகுதி நோக்கி செல்லும் வாகனங்களை பொருத்தவரை காளவாசல் பஸ் நிறுத்தத்தை வெளியூர் மற்றும் உள்ளூர் பஸ்கள் பயன்படுத்துகின்றன.
ஆனால் இங்கு இருந்த பஸ் நிறுத்த நிழற்குடையை அகற்றி விட்டதால் பஸ்களை எங்கு நிறுத்துவது என்பதில் தொடர்ந்து சந்தேகம் இருந்து வருகிறது. இதனால் சிக்னல் வளைவில் (தேனி ரோட்டில்) அரசு மற்றும் தனியார் பஸ் மற்றும் ஷேர் ஆட்டோக்களை நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்குவதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதை அங்கு போக்குவரத்தை கண்காணித்து வரும் போக்குவரத்து போலீசார் கண்டுகொள்வதில்லை.
டிரைவர்கள் ஒவ்வொரு இடத்தில் பஸ்களை நிறுத்தி பயணிகளை ஏற்றி செல்கின்றனர். இதனால் எங்கு நின்று பஸ் ஏறுவது என தெரியாமல் பயணிகள் அவதிப்படுகின்றனர். மேலும் பஸ் நிறுத்தும் இடங்களை மறித்து ஷேர்ஆட்டோக்கள் நிறுத்தி வைத்து பயணிகளை ஏற்றுகின்றனர். இதனால் அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
காளவாசல் சிக்னலில் தனி போலீஸ் கண்காணிப்பு அறை இருந்தபோதும் 4 புறங்களிலும் வாகனங்களை கண்காணித்து ஒழுங்குப் படுத்தவேண்டி உள்ளதால் அவர்களும் சிரமத்திற் குள்ளாகின்றனர்.
தொடர்ச்சியாக மைக்கில் அறிவிப்பு செய்தும் சிக்னல் அருகில் நின்றும் வாகனங்களை ஒழுங்குப்படுத்தும் நிலையிலும் பலர் விதிகளை மீறி சென்று போக்குவரத்து இடையூறு செய்கின்றனர்.
தற்போது நடந்துவரும் பாலப்பணிகள் முடிவடையும் பட்சத்தில் அந்த சாலையில் வாகன போக்குவரத்து மேலும் அதிகரிக்கும். இதனால் போக்குவரத்து நெரிசலுக்கான வாய்ப்பு மேலும் அதிகரிக்கக்கூடும்.
எனவே காளவாசல் சிக்னலில் போக்குவரத்து நெரிசல் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண உயர்அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் தொடர்ச்சியாக கோரிக்கை வைத்து வருகின்றனர்.