நீட் தேர்வில் 705 மதிப்பெண்கள் பெற்று மதுரை மாணவர் சாதனை
- நீட் தேர்வில் 705 மதிப்பெண்கள் பெற்று மதுரை மாணவர் சாதனை படைத்தார்.
- 2 ஆண்டு உழைப்பால் வெற்றி சாத்தியமானது என்று கூறினார்.
மதுரை
இந்தியாவில் உள்ள அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டில் இளங்கலை மருத்துவம் (MBBS), பல் மருத்துவம் (BDS) ஆயுஷ் (BAMS, BUMS, BHMS) படிப்புகளை தொடர விரும்பும் மாணவர்களுக்கு தேசிய தேர்வு முகமை ஆண்டுதோறும் நீட் தேர்வு நடத்தி வருகிறது.
இதன் ஒரு பகுதியாக நடப்பு ஆண்டுக்கான தேர்வு முடிவுகளை, தேசிய தேர்வு ஆணையம் நேற்று மாலை வெளியிட்டது. இதில் மதுரை கே.கே.நகரை சேர்ந்த மாணவன் த்ரிதேவ் விநாயகா, அகில இந்திய தரவரிசையில் 30-வது இடத்தை பெற்றுள்ளார்.
இவர் மருத்துவ நுழைவுத்தேர்வில் 720-க்கு 705 மதிப்பெண் பெற்றுள்ளார். இது தொடர்பாக த்ரிதேவ் விநாயகா கூறியதாவது:-
நீட் தேர்வில் வெற்றி பெற 2 ஆண்டு வகுப்பறை திட்டத்தில் சேர்ந்தேன். அப்போது கருத்துகளை புரிந்து கொள்வதில் எடுத்த முயற்சிகள் மற்றும் கற்றல் அட்டவணையை கண்டிப்பாகப் பின்பற்றியதால், நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற முடிந்தது.
அதுவும் தவிர கேள்வி வங்கிகளை ஆன்லைனில் கூர்ந்து படித்தேன். தேர்வுக்கு தயாராகும் வகையில் நேர மேலாண்மை திறன்கள் குறித்த மெய்நிகர் ஊக்க அமர்வுகள் மற்றும் கருத்தரங்குகளில் கலந்து கொண்டேன். கடின உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் பெற்றோர் ஆதரவு காரணமாக நான் இந்த நிலையை எட்ட முடிந்தது.
இவ்வாறு அவர் கூறினார்.