மதுரையில் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்
- மதுரையில் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்
- 100 வார்டுகளில் கடந்த சில மாதங்களாக சரியாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை.
மதுரை
மதுரை மாநகராட்சிக் குட்பட்ட 100 வார்டுகளில் கடந்த சில மாதங்களாக சரியாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என புகார்கள் எழுந்து வருகிறது.
மதுரை நகரின் மைய பகுதியில் உள்ள 50-வது வார்டான சிம்மக்கல், காமாட்சிபுரம் அக்ரஹாரம் மற்றும் அதனை சுற்றி உள்ள தெருக்களில் கடந்த 10 நாட்களாக குடிநீர் விநி யோகம் செய்யப்படவில்லை. இதனால் அந்த பகுதி மக்கள் கடும் அவதி அடைந்தனர். வேறு பகுதிகளுக்கு சென்று தண்ணீர் எடுத்து வர வேண்டிய நிலை ஏற்பட்டது. மேலும் பணம்கொடுத்து குடம் தண்ணீரை பொது மக்கள் வாங்கி பயன்படுத்தி வந்தனர்.
குடிநீர் பிரச்சினை தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதை கண்டித்தும், உடனே குடிநீர் விநியோகத்தை சரி செய்ய வலியுறுத்தியும் இன்று மதுரை மாவட்ட நூலகம் எதிரே உள்ள சிம்மக்கல் சந்திப்பு சாலையில் காலி குடங்களுடன் பெண்கள் திரண்டனர்.
அவர்கள் திடீரென சாலையில் நின்று கொண்டு மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப் பட்டது.
தகவல் அறிந்த போலீசார் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடம் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். குடிநீர் பிரச் சினை சரி செய்யப்படும் என உறுதி கூறியதையடுத்து மறியல் கைவிடப்பட்டது.