உள்ளூர் செய்திகள்

கொலையான சக்திவேல்.

வியாபாரி கொலை: பழிதீர்த்த கும்பல்

Published On 2022-07-01 08:47 GMT   |   Update On 2022-07-01 08:47 GMT
  • வியாபாரியை கும்பல் பழிதீர்த்ததா? போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
  • 6 பேர் கொண்ட கும்பல் கண் இமைக்கும் நேரத்தில் சக்திவேலை சரமாரியாக வெட்டியது.

மதுரை

மதுரை மாவட்டம் திருமங்கலம் சந்தைப்பேட்டையைச் சேர்ந்தவர் குண்டார் என்ற சக்திவேல் (வயது 37). இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திண்டுக்கல் மாவட்டம் அனுமந்தராயன் கோட்டையைச் சேர்ந்த ஜவுளி வியாபாரி ஸ்டீபன் என்பவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான சக்திவேலை போலீசார் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்திருந்தனர்.

இந்த வழக்கில் ஜாமீன் பெற்ற சக்திவேல் நேற்று காலை ஜெயிலில் இருந்து வெளியே வந்தார். மதுரையில் உள்ள சில நண்பர்களை சந்தித்து பேசிய சக்திவேல் பின்னர் மோட்டார் சைக்கிளில் திருமங்கலத்துக்கு புறப்பட்டார். செக்கானூரணி-மேலக்கால் மெயின்ரோட்டில் சென்று கொண்டிருந்தபோது திடீரென ஒரு கார் அவரை வழிமறித்தது. அதில் இருந்து பயங்கர ஆயுதங்களுடன் இயங்கிய 6 பேர் கொண்ட கும்பல் கண் இமைக்கும் நேரத்தில் சக்திவேலை சரமாரியாக வெட்டியது. இதில் ரத்த வெள்ளத்தில் சாய்ந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த சமயநல்லூர் டி.எஸ்.பி. பாலசுந்தரம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு விசாரணை நடத்தினர். கொலையாளிகளை பிடிக்க இன்ஸ்பெக்டர்கள் சிவபாலன் (சோழவந்தான்), சங்கர் கண்ணன் (அலங்காநல்லூர்) ஆகியோர் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.

ஜாமீனில் வெளிவந்த சக்திவேல், ஜவுளி வியாபாரி ஸ்டீபன் கொலைக்கு பழிக்கு பழியாக கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தொடங்கினர்.

கொலையான சக்திவேல் கடந்த 2020-ம் ஆண்டு மேல உரப்பனூரைச் சேர்ந்த பால் வியாபாரி மணிகண்டன் என்பவரையும் கொலை செய்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக இருந்துள்ளார். இந்த வழக்கில் ஏற்கனவே தொடர்புடைய அட்டாக் பிரகாஷ் என்ற ரவுடியை மர்ம கும்பல் கழுத்தறுத்து கொலை செய்தது. எனவே அதே கும்பல் தான் சக்திவேலையும் கொலை செய்ததா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

பழிக்கு பழியாக ரவுடி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News