உள்ளூர் செய்திகள்

மெட்ரோ திட்டப்பணிகள் குறித்து மதுரை ரெயில் நிலையம் முன்பு அதிகாரிகள் ஆய்வு செய்த காட்சி. 

மதுரையில் மெட்ரோ ரெயில் திட்டம் செயல்படுத்த சாத்தியக்கூறுகள் உள்ளது-திட்ட இயக்குநர் பேட்டி

Published On 2023-06-27 08:57 GMT   |   Update On 2023-06-27 08:57 GMT
  • மதுரையில் மெட்ரோ ரெயில் திட்டம் செயல்படுத்த சாத்தியக்கூறுகள் உள்ளதாக திட்ட இயக்குநர் பேட்டியளித்துள்ளார்.
  • வைகையாற்றில் பாறை பகுதிகளில் மெட்ரோ வழித்தடம் அமைப்பதால் எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்றார்.

மதுரை

மதுரையில் மெட்ரோ ரெயில் சேவை அமைக்கப்படும் என சட்டமன்ற கூட்டத் தொடரில் அறிவிக்கப்பட்டது. அதற்கான ஆரம்ப கட்டப்பணிகள் மதுரையில் நடைபெற்று வருகிறது. திருமங்கலம் முதல் ஒத்தக்கடை வரை மண் பரிசோதனை, வழித்தடம் போன்றவற்றை அதிகாரி கள் ஆய்வு செய்தனர்.

மெட்ரோ ரெயில் திட்டம் தொடர்பாக மதுரையில் திட்ட இயக்குநர் அர்ஜூனன் மற்றும் அதிகாரிகள் கள ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அவர் நிருபர்க ளிடம் கூறியதாவது:-

திருமங்கலம் முதல் ஒத்தக்கடை வரை மெட்ரோ ரெயிலுக்காக மண் பரிசோதனை செய்யப்பட்டு 90 சதவீத பணிகள் முடிந்து இறுதி அறிக்கை குறித்து ஆய்வு மேற்கொண்டோம். திருமங்கலம் பஸ் நிலையம் அருகில், தோப்பூர், மதுரை ரெயில் நிலையம் அருகில் மற்றும் மாசி வீதிகளில் மெட்ரோ ரெயில் நிறுத்தம் அமைப்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றி மாசி வீதிகளில் தேரோட்டம் பாதிக்கப்படாத வகையிலும், பழமையான கட்டிடங்கள் சேதமடையாத வகையிலும் மெட்ரோ ரெயில் நிறுத்தம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மதுரை வைகை ஆறு முதல் கோரிப்பாளையம் வரை மெட்ரோ சுரங்கப்பாதை அமைப்பதற்காக முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பணிகள் தாமதமாக வாய்ப்புள்ளது.

வைகையாற்றில் பாறை பகுதிகளில் மெட்ரோ வழித்தடம் அமைப்பதால் எந்தவித பாதிப்பும் ஏற்படாது. மதுரை மெட்ரோ ரெயில் திட்டத்தை பொறுத்தவரை வைகை ஆற்றின் கீழ் வழித்தடம் அமைப்பது, மீனாட்சி அம்மன் கோவில் பகுதியில் மெட்ரோ ரெயில் நிறுத்தம் அமைப்பது சவாலான பணிகளாக இருக்கும். மதுரையில் மெட்ரோ ரெயில் திட்டம் செயல்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகளவில் உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News