50-க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு கடைகள் அதிரடி அகற்றம்
- மாட்டுத்தாவணியில் 50-க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கடைகள் அதிரடி அகற்றப்பட்டது.
- மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
மதுரை
மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் ஆக்கிரமித்து வைக்கப்பட்ட 50 க்கும் மேற்பட்ட கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினர்.
மதுரை மாநகராட்சி பகுதிகளில் சாலை மற்றும் பஸ் நிலையப்பகுதிகளில் போக்குவரத்திற்கு இடையூறாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கடைகளை அப்புறப்படுத்தும் நடவடிக்கைகளில் மதுரை மாநகராட்சி நிர்வாகம் தீவிரமாக இறங்கி உள்ளது.
மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் பஸ் நிலையம் முதல் பூக்கடை பகுதிகள் வரை சாலையின் ஓரங்களில் சிறு சிறு கடைகள் அமைத்து பலர் ஆக்கிரமித்துள்ளதாக மாநகராட்சிக்கு புகார்கள் வந்தன. இதனால் பூ மார்க்கெட் மட்டும் மாட்டுத்தாவணி பஸ் நிலையப் பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற மாநகராட்சி கமிஷனர் உத்தரவிட்டார். இதையடுத்து அதிகாரிகள் இன்று காலை அந்த பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.
புல் டோசர் உதவியுடன் ஆக்கிரமிக்கப்பட்ட 50க்கும் மேற்பட்ட கடைகள் அப்புறப்படுத்தப்பட்டன. அப்போது ஆக்கிரமிப்பாளர்களுக்கும் மாநகராட்சி ஊழியர்களுக்கும் சிறிது வாக்குவாதம் ஏற்பட்டது.
ஆனாலும் போலீஸ் பாதுகாப்புடன் அனைத்து பகுதிகளிலும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.