போக்குவரத்து விதிமுறைகளை மீறிச் செல்லும் வாகன ஓட்டிகள்
- போலீசார் முன்னிலையில் போக்குவரத்து விதிமுறைகளை மீறிச் செல்லும் வாகன ஓட்டிகள் மீது பயணிகள் புகார் அளித்தனர்.
- விதிகளை மீறிச்செல்வதை வேடிக்கை பார்த்தபடி இருக்கின்றனர்.
மதுரை
மதுரை சென்னைக்கு அடுத்து பெரிய நகரமாக விளங்கி வருகிறது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பல்வேறு பணிகள் செய்யப் பட்டுள்ளன. இருந்த போதிலும் போக்குவரத்தில் இன்னும் பின்தங்கியே இருக்கிறது.
மதுரை பெரியார் பஸ் நிலையம் அருகில் சிக்னல் அமைந்துள்ளது. அதன் அருகில் போலீசார் கண்காணிக்கும் இடம் உள்ளது. இந்த நிலையில் சிக்னல் பகுதியில் வரும் பல வாகனங்கள் போக்குவரத்து விதிகளை கடைபிடிக்காமல் சிவப்பு விளக்கு எரியும் போதும் நிற்காமல் செல்கின்றனர். இதனால் பொதுமக்களுக்கு சாலை யை கடப்பதில் சிரமம் ஏற்படுகிறது.
ஒரு சில நேரங்களில் மட்டுமே போலீசார் சிக்னல் பகுதியில் நின்று வாகனங்கள் விதிமுறை மீறலை தடுக்கின்றனர். பல நேரம் வாகனங்கள் விதிகளை மீறிச் செல்வதை வேடிக்கை பார்த்தபடி இருக்கின்றனர்.
மேலும் இன்றைய வாகன ஓட்டிகள் பலர் நடந்து செல்பவர்களுக்கு வழி விடும் மனநிலை இல்லாமல் தங்கள் இஷ்டத்துக்கு செல்கின்றனர். இதனால் விபத்து ஏற்படும் அபாயம் நிலவுகிறது. எனவே போக்குவரத்து போலீசார் வாகன விதிமுறை மீறல்களை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.