தேவர்சிலைக்கு ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை
- கோரிப்பாளையம் தேவர்சிலைக்கு ஓ.பன்னீர்செல்வம் நாளை காலை மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.
- முன்னாள் எம்.பி. கோபாலகிருஷ்ணன் ஏற்பாட்டில் வழிநெடுக வரவேற்பு அளிக்கப்படுகிறது.
மதுரை
பசும்பொன் முத்துராம லிங்க தேவரின் 115-வது ஜெயந்தி விழா நாளை (30-ந்தேதி) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மதுரை கோரிப்பாளையம் ரவுண்டானாவில் உள்ள தேவர் சிலை மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு உள்ளது.
பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக பங்கேற்று பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு புகழஞ்சலி செலுத்தி வருகிறார்கள். நாளை காலை 9.30 மணிக்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அவரது ஆதரவாளர்கள் கோரிப்பா ளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்கள்.
இதற்காக ஓ.பன்னீர் செல்வம் இன்று இரவு மதுரை வருகிறார். பின்னர் நாளை காலை 9 மணிக்கு அழகர் கோவில் ரோட்டில் உள்ள விடுதியில் இருந்து கோரிப்பாளையம் புறப்படும் ஓ.பன்னீர் செல்வத்துக்கு முன்னாள் எம் பி. கோபால கிருஷ்ணன் தலைமையில் திரளானோர் பங்கேற்று உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர்.
தல்லாகுளம், தமுக்கம் மைதானம், கோரிப்பாளையம் வரை வழிநெடுக ஓ.பன்னீர் செல்வத்துக்கு சிறப்பான வரவேற்பு வழங்கப்படுகிறது.
இதையடுத்து கோரிப்பாளையம் தேவர் சிலையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் ஓ.பன்னீர்செல்வம் அங்கிருந்து ஆதரவாளர்களுடன் ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்திற்கு சென்று காலை 11 மணியளவில் தேவர் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்துகிறார்.
அவருடன் முன்னாள் அமைச்ச ர்கள் வைத்திலிங்கம், கு.ப.கிருஷ்ணன் மற்றும் ஜே. சி. டி. பிரபாகரன், மனோஜ் பாண்டியன் உள்ளிட்ட நிர்வாகிகளும் கலந்து கொள்கிறார்கள்.
இதுகுறித்து முன்னாள் எம்.பி. கோபாலகிருஷ்ணன் கூறியதாவது:-
அ.தி.மு.க. ஒருங்கிணை ப்பாளர்-முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செ ல்வம், தேவர் ஜெயந்தி விழாவில் பங்கேற்பதற்காக இன்று இரவு மதுரை வருகிறார். மதுரை அழகர் கோவில் ரோட்டில் உள்ள விடுதியில் தங்கும் அவர் நாளை (30-ந்தேதி) காலை 9 மணி அளவில் அங்கிருந்து புறப்பட்டு கோரிப்பாளையம் தேவர் சிலைக்கு வருகிறார். வழிநெடுக அவருக்கு மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்க படுகிறது.
கோரிப்பாளையத்தில் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்னர் ஓ.பன்னீர்செல்வம் பசும்பொன் செல்கிறார்.
இந்த நிகழ்ச்சியில் அம்மாவின் உண்மை விசுவாசிகள் அனைவரும் பங்கேற்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு உற்சாக வரவேற்பு அளிக்கிறார்கள். இதில் அனைத்து நிர்வாகிகளும், பொதுமக்களும் திரளாக பங்கேற்க வேண்டுகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.