சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி: மதுரையில் இருந்து 12 மாணவர்கள் பங்கேற்பு
- சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியில் மதுரையில் இருந்து 12 மாணவர்கள் பங்கேற்றனர்.
- வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகா, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் செங்கதிர் ஆகியோர் பதக்கம், பரிசு வழங்கி பாராட்டினர்.
மதுரை
மாமல்லபுரத்தில் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நடந்து வருகிறது. இதனை தமிழக அரசு மற்றும் மாநகராட்சி பள்ளி மாணவர்கள் கண்டு களிக்கும் வகையில் ஒன்றிய- மாவட்ட அளவில் சதுரங்க போட்டிகள் நடத்துவது என்று மதுரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முடிவு செய்தது.
அதன்படி 6,7,8-ம் வகுப்பு,9,10-ம் வகுப்பு, 11, 12-ம் வகுப்பு ஆகிய 3 பிரிவுகளில், சதுரங்க போட்டிகள் நடத்தப்பட்டன. 6,7,8-ம் வகுப்புகளுக்கான சதுரங்க போட்டியில் மதுரை அ.வல்லாளப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த சோலையம்மாள், தமிழரசி, அனுப்பானடி மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி மகராஜ், டி.அரசம்பட்டி உயர்நிலைப்பள்ளி பாண்டியராஜா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
9,10-ம் வகுப்புக்கான போட்டியில் அ.வல்லா ளப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி கலைச்செல்வி, கோகிலா, தேவநாத், சந்தோஷ் ஆகியோர் தேர்வாகினர்.
11,12-ம் வகுப்புக்கான சதுரங்க போட்டியில் ஒத்தக்கடை மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளி சங்கீதா, வல்லாளப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி வெற்றிசெல்வி, பிரதீப், பேரையூர் காந்தி நினைவு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முகமது தபின் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
சதுரங்க போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகா, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் செங்கதிர் ஆகியோர் பதக்கம், பரிசு வழங்கி பாராட்டினர்.
பரிசு பெற்ற மாணவ- மாணவிகளை மாமல்லபுரத்துக்கு அழைத்துச் செல்வதற்கான ஏற்பாடுகள் நடந்தது. முதலிடம் பெற்ற 4 பேர் விமானம் மூலம் அழைத்துச் செல்லப்பட்டனர்.
மாமல்லபுரம் சர்வதேச ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்க வந்த நிகரகுவா நாட்டு வீரர்களை, மதுரை மாணவர் பிரதீப் அடையாள அட்டை ஏந்தியபடி அழைத்து வந்தார்.
மதுரையில் இருந்து 4 பேர் அடங்கிய குழு, நேற்று பஸ் மூலம் மாமல்லபுரத்துக்கு சென்றது. இந்த நிலையில் 4 பேர் குழு, நாளை மாமல்லபுரம் செல்கிறது. அங்கு அவர்களுக்கு செம்மஞ்சேரி பாலிடெக்னிக் கல்லூரியில் பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது.