முருகப் பெருமானுக்கு நாளை பட்டாபிஷேகம்
- திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை திருவிழாவையொட்டி முருகப்பெருமானுக்கு நாளை பட்டாபிஷேகம் நடக்கிறது.
- வருகிற 26-ந்தேதி தேரோட்டமும், மகா தீபமும் நடக்கிறது.
திருப்பரங்குன்றம்
முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடு என்ற பெருமை கொண்டது திருப்பரங்குன்றம். இங்கு கொண்டாடப்படும் விழாக்களில் பிரசித்தி பெற்றது கார்த்திகை தீபத் திருவிழா. இந்த திருவிழா கார்த்திகை மாதத்தில் 10 நாட்கள் விமரிசையாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு கடந்த 17-ந்தேதி கார்த்திகை மாதம் பிறந்தது, இதையடுத்து கடந்த 18-ந் தேதி கொடியேற்றத்துடன் தீபத் திருவிழா தொடங்கியது.
விழாவினை முன்னிட்டு தினமும் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் காலையில் தங்க சப்பரத்திலும், மாலையில் தங்கமயில் வாகனம், பூத வாகனம், அன்ன வாகனம், சேஷ வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்கள்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நாளை மாலை சுப்பிரமணிய சுவாமிக்கு பட்டாபிஷேகம் நடைபெற உள்ளது. தொடர்ந்து விழாவின் சிகர நிகழ்ச்சி யாக 26-ந் தேதி காலை கார்த்திகை தேரோட்டம் நடைபெறும். பின்னர் மாலையில் கோவில் மூலஸ் தானத்தில் பாலதீபம் ஏற்றப்பட்டு மலை மேல் மகா தீபம் ஏற்றப்படும். தொடர்ந்து 16 கால் மண்டபம் பகுதியில் சொக் கப்பனை கொளுத்தப்படும்.
இந்த நிகழ்ச்சிகளில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள்.விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் துணை ஆணையர் சுரேஷ் தலை மையில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
கார்த்திகை தீப திரு விழாவின்போது மலை மேல் உள்ள விநாயகர் கோவில் மேல் தளத்தில் தாமிரக்கொப்பரையில் மகாதீபம் ஏற்றப்படும். அதே வேளையில் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என இந்து அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன.
இந்த நிலையில் திருப் பரங்குன்றம் மலையை சுற்றி உள்ள பகுதிகள், படிக்கட்டு பாதை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப் பட்டுள்ளது. மேலும் மலை மேல் உள்ள தீபத்தூணை சுற்றிலும் தற்காலிக வேலி அமைத்து 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
வருகிற 26-ந் தேதி தேரோட்டம் நடைபெறுவதை முன்னிட்டு திருப்பரங்குன்றம் நகர் பகுதியை சுற்றிலும்
500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.