தி.மு.க.வை நம்பி மக்கள் ஏமாந்து விட்டனர்- நடிகை விந்தியா பேச்சு
- தி.மு.க.வை நம்பி மக்கள் ஏமாந்து விட்டனர் என்று அ.தி.மு.க. ஆர்ப்பாட்டத்தில் நடிகை விந்தியா ேபசினார்.
- திருப்பரங்குன்றத்தில் அரசின் மின்கட்டண உயர்வை கண்டித்து புறநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
திருப்பரங்குன்றம்
திருப்பரங்குன்றத்தில் அரசின் மின்கட்டண உயர்வை கண்டித்து புறநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்டச் செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். இளைஞரணி செயலாளர் வக்கீல் ரமேஷ், ஒன்றிய செயலாளர் நிலையூர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கொள்கை பரப்பு செயலாளர் நடிகை விந்தியா கலந்து கொண்டு பேசியதாவது:-
தி.மு.க. விடியல் ஆட்சி தருவோம் எனக் கூறி மக்களிடம் பல்வேறு பொய் வாக்குறுதிகளை அளித்து ஆட்சிக்கு வந்தது. அ.தி.மு.க.வின் பல்வேறு நலத்திட்டங்களை நிதியை காரணம் காட்டி நிறுத்தி வைத்தது. தாலிக்கு தங்கம், மடிக்கணினி, இருசக்கர வாகனம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை நிதி இல்லை என காரணம் காட்டி தி.மு.க. அரசு நிறுத்திவிட்டது.
ஆனால் அதே சமயத்தில் ரூ. 100 கோடியில் நூலகம், ரூ. 80 கோடியில் பேனா என அரசு நிதியை தங்களது சொந்த சுயலாபத்திற்காக வீணடித்து வருகின்றனர். சொத்து வரி உயர்வு, பால் பொருட்கள் விலை உயர்வு, பஸ் கட்டண உயர்வு, தற்போது மின் கட்டண உயர்வு என தொடர்ந்து மக்களை வஞ்சிக்கும் அரசாக தி.மு.க. உள்ளது. தி.மு.க.வை நம்பி தமிழக மக்கள் ஏமாந்து விட்டனர்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் மேலூர் சட்டமன்ற உறுப்பினர் பெரிய புள்ளான், பொதுக்குழு உறுப்பினர் மரக்கடை முருகேசன், மாவட்ட துணை செயலாளர் ஓம்.கே.சந்திரன், எம்.ஜி.ஆர். இளைஞர் அணி மாநில துணைச் செயலாளர் பாரி, இலக்கிய அணி மாவட்ட செயலாளர் மோகன்தாஸ், பகுதி செயலாளர் பன்னீர்செல்வம், துணை செயலாளர் செல்வகுமார், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பாலமுருகன், வட்டச் செயலாளர்கள் பொன்.முருகன், பாலமுருகன், எம்.ஆர். குமார் உள்பட ஏராளமான ஒரு கலந்து கொண்டனர்.