மதுரை மாநகராட்சியில் அடிப்படை வசதிகளை உடனுக்குடன் நிறைவேற்ற கோரி மனு
- மதுரை மாநகராட்சியில் அடிப்படை வசதிகளை உடனுக்குடன் நிறைவேற்ற வேண்டும்.
- கமிஷனரிடம், முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கோரிக்கை மனு அளித்துள்ளார்.
மதுரை
மதுரை மாநகராட்சியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தர வலியுறுத்தி முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்ட செயலாளருமான செல்லூர் ராஜூ எம்.எல்.ஏ., கமிஷனர் பிரவீன்குமாரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-
மதுரை மாநகராட்சி 62-வது வார்டு முதல் 69-வது வார்டு வரை கழிவுநீர் பிரச்சினை உள்ளது. முறையாக பராமரிக்கா ததால் மேற்கண்ட வார்டுகளில் உள்ள சாலை மற்றும் தெருக்களில் கழிவுநீர் ஆறாக ஓடுகிறது. இதே போல் 72-வது வார்டான பைக்காரா மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் பொதுமக்கள் கடும் அவதியடைகின்றனர்.
எனவே முத்துப்பட்டியில் உள்ள கழிவுநீரேற்று நிலையத்தை மேம்படுத்தி புனரமைக்க வேண்டும். அதிக விசைத்திறன் கொண்ட மோட்டார்களை பயன்படுத்தி புதிய பம்பிங் ஸ்டேசன் அமைக்க வேண்டும்.
காளவாசல் முதல் சம்மட்டிபுரம் பகுதிகளில் கழிவுநீர் பிரச்சினையை சரிசெய்ய வேண்டும். மாநகராட்சியில் உள்ள 5 மண்டலங்களுக்கும் நவீன கழிவுநீர் அகற்றும் வாகனத்தை வாங்க வேண்டும். இதனால் பாதாள சாக்கடை அடைப்பு பிரச்சினை குறையும்.
கடந்த 2 ஆண்டுகளில் மதுரை மாநகராட்சியில் ரூ.717.10 கோடி செலவில் பணிகள் மேற்கொள்ளப் பட்டு உள்ளதாக நகராட்சி துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். அதன் விபரங்களை வழங்க வேண்டும். மதுரை மாநகராட்சியில் சாலையில் குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு விபத்துக்கள் ஏற்படுகிறது. எனவே சாலைகளை செப்பனிட வேண்டும்.
மாநகராட்சியில் தெருவிளக்குகள் சரிவர எரிவதில்லை. இதனால் இருளில் மூழ்கும் நிலை உள்ளது. எனவே தெரு விளக்குகளை பராமரித்து உடனுக்குடன் சரி செய்ய வேண்டும். சுகாதார பணியாளர்கள் பற்றாக்குறையால் குப்பைகள் மலைபோல் தேங்குகிறது. எனவே உரிய பணியாளர்களை நியமித்து குப்பையில்லா நகரமாக மாற்ற வேண்டும்.
வைகை ஆற்றில் ஆகாய தாமரையை அகற்ற வேண்டும். பனையூர் வாய்க்காலை சீரமைக்க வேண்டும். மாரியம்மன் தெப்பக்குளத்தில் கழிவுநீர் கலக்காத வண்ணம் பாதுகாக்க வேண்டும். தமுக்கத்தில் உள்ள வளாக கட்டிடத்திற்கு வாடகை பல மடங்கு அதிகரித்துள்ளது. எனவே அதனை குறைக்க வேண்டும். மதுரை மாநகராட்சியில் அடிப்படை வசதிகளை போக்கால அடிப்படையில் உடனுக்குடன் நிறைவேற்ற வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.