கோரிப்பாளையத்தில் பல்லடுக்கு வாகன நிறுத்துமிடம் அமைக்க திட்டம்
- கோரிப்பாளையத்தில் பல்லடுக்கு வாகன நிறுத்துமிடம் அமைக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
- வாகன நிறுத்தம் அமைப்பதற்கான இடங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.
மதுரை
மதுரை முக்கிய சுற்றுலா தலமாகவும், அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இடமாகவும் உள்ளது. தமிழ்நாட்டில் 2-வது பெரிய மக்கள் தொகை கொண்ட நகரமாகவும் உள்ளது. இந்த நிலையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மதுரையில் பல்வேறு வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் மதுரையின் பல பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. மேலும் சாலைகளில் வாகனங்கள் நிறுத்தப்படுவதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது.
இந்த நிலையில் மதுரையின் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கு மாநகராட்சி சார்பிலும், போக்குவரத்து போலீசார் சார்பிலும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கோரிப்பாளையம், கீழவாசல், தெற்குவாசல், காளவாசல், ஆரப்பாளையம், சிம்மக்கல், கீழமாசிவீதி, பெரியார் பஸ் நிலையம், பழங்காநத்தம், காமராஜர் சாலை, விளக்குத்தூண் ஆகிய நகரின் முக்கிய பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது.
இந்த பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக நடவடிக்கைகள் எடுப்பதற்கு மாநகராட்சி திட்டமிட்டு வருகிறது.
இந்த நிலையில் கோரிப்பாளையம் பகுதியில் அதிக வாகன போக்குவரத்து உள்ளதாலும், அரசு ஆஸ்பத்திரி உள்ளிட்ட பகுதிகளில் வாகனங்கள் சாலையோரங்களில் நிறுத்தப்படுவதாலும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது.
இந்த நிலையில் அந்த பகுதியில் பல்லடுக்கு வாகனங்கள் நிறுத்தும் இடத்தை அமைக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே மீனாட்சி அம்மன் கோவில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பல்லடுக்கு வாகன நிறுத்தத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததையடுத்து கோரிப்பாளையத்திலும் வாகன நிறுத்தும் இடம் அமைக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
இதற்காக டெண்டர் கோரப்பட்டுள்ளது. வாகன நிறுத்தம் அமைப்பதற்கான இடங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. விரைவில் உரிய இடம் தேர்வு செய்யப்பட்டு வாகனம் நிறுத்தும் இடம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் நகரில் ஏற்கனவே உள்ள 2 பல்லடுக்கு வாகன நிறுத்தம் இடங்களை நவீனப்படுத்தவும் மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
இதனால் அரசு ஆஸ்பத்திரி, அண்ணா பஸ் நிலையம்,கோரிப்பாளையம் பகுதிகளில் சாலைகளில் வாகனங்கள் நிறுத்தப்படுவதை தடுக்க முடியும் என மாநகராட்சி எதிர்பார்க்கிறது. மேலும் போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள காளவாசல், பை-பாஸ் ரோடு, மாசிவீதிகள், காமராஜர் சாலை உள்ளிட்ட பகுதிகளில் பல்லடுக்கு வாகனங்கள் நிறுத்தும் இடங்கள் அமைக்கப்பட்டால் வாகன ஓட்டிகளுக்கும், போக்குவரத்து போலீசாருக்கும் சிரமம் குறையும் என எதிர்பார்க்கலாம்.