பணியாளர்களுடன் பொதுமக்களும் ஒத்துழைக்க வேண்டும்
- பணியாளர்களுடன் இணைந்து பொதுமக்களும் ஒத்துழைக்க வேண்டும் என ஆணையாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
- தரம் பிரித்து வாங்கப்பட்டு அந்தந்த உரக்கூடங்களில் உரமாக்கும் பணி நடந்து வருகிறது.
மதுரை
மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 100 வார்டு பகுதிகளில் சேரும் குப்பைகளை தினந்தோறும் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் வெள்ளக்கல் குப்பை சேகரிக்கும் மையத்திற்கு கொண்டு சென்று பிரிக்கப்பட்டு உரமாக்கப்பட்டு வருகிறது.
மாநகராட்சியின் நுண்ணுயிர் உரக்கூடங்களில் மக்கும் குப்பைகள் மட்டும் தரம் பிரித்து வாங்கப்பட்டு அந்தந்த உரக்கூடங்களில் உரமாக்கும் பணி நடந்து வருகிறது.
மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள உணவகங்கள், தங்கும் விடுதிகள், திருமண மண்டபங்கள், குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட அனைவரும் குப்பைகளை முறையாக பிரித்து வழங்க வேண்டும். பொதுமக்கள் வீடுகளில் சேரும் குப்பைகளை தரம் பிரித்து தெருக்களில் தூய்மைப்பணிகள் மேற்கொள்ளும் பணியாளர்களிடம் வழங்க வேண்டும்.
மேலும் இரவு நேர சாலையோர உணவகங்களில் சேரும் உணவு கழிவுகளை சாலைகள், மழைநீர் வடிகால்கள், வாய்க்கால்களில் கொட்டாமல் அவற்றை முறையாக அகற்ற வேண்டும். கடந்த வாரத்தில் மட்டும் சாலைகளில் குப்பைகளை கொட்டிய 2 தனியார் திருமண மண்டப உரிமையாளர்களுக்கு தலா ரூ.10ஆயிரம் மாநகராட்சியால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இதுபோன்று சுகாதார சீர்கேடு ஏற்படுத்தும் வகையில் சாலைகளில் குப்பைகள் கொட்டுபவர்கள் மீது தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும்.
எனவே மதுரை மாநகரை தூய்மையான மாநகராக வைத்துக் கொள்ளுவதற்கு அனைவரும் முழு ஒத்துழைப்பு தருமாறு மதுரை மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வேண்டுகோள் விடுத்தார்.