சாலையை சீரமைக்க கோரி பொதுமக்கள் 'திடீர்' மறியல்
- பாலமேடு அருகே சாலையை சீரமைக்க கோரி பொதுமக்கள் ‘திடீர்’ மறியல் நடத்தினர்.
- சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க உதவி புரிவதாக போலீசார் உறுதியளித்ததை ஏற்று கிராம மக்கள் கலைந்து சென்றனர்.
அலங்காநல்லூர்
மதுரை மாவட்டம் மாணிக்கம்பட்டி-ராஜக்காள்பட்டி செல்லும் சாலை கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்டது. இந்தப்பகுதியில் குடியிருப்புகள் மற்றும் தொழிற்சாலைகள் உள்ளன.
இந்த வழியாக குவாரி களுக்கு அதிகப்படியான கனரக வாகனங்கள் செல்வதால் சாலை முழுவதும் குண்டும், குழியுமாக உள்ளது. சாலை வழியாக வாகனங்கள் செல்லும் போது சாலையோரமாக குடியிருப்போர் வீடுகள் முழுவதும் புழுதி பரவி காற்று மாசு ஏற்படுகிறது. எனவே புழுதி பறக்காமல் இருக்க சாலையில் தண்ணீர் ஊற்ற வேண்டும் என்று அந்தப்பகுதி பொதுமக்கள் கூறுகின்றனர்.
ழைக்காலங்களில் சாலை பள்ளங்களில் மழைநீர் தேங்கி விபத்து ஏற்படுகிறது. இதனால் பாதிக்கப்படும் பொதுமக்கள் இந்த சாலையை தார் சாலையாக அமைத்து தர வேண்டும் என்று இன்று காலை திடீர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
இதுபற்றி அந்தப்பகுதி மக்கள் கூறுகையில், குண்டும் குழியுமான சாலை குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது வாகனங்கள் செல்லும்போது வீடுகளுக்குள் அதிகளவில் புழுதி பறக்கிறது. இதனால் உடல்நலம் பாதிக்கப்பட்டு வருகிறது. எனவே புழுதி பறக்காமல் இருக்க தினமும் சாலையில் தண்ணீர் ஊற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த புழுதி காரணமாக குழந்தைகளும் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். ஏற்கனவே ஒருமுறை போராட்டம் நடத்தியும் நடவடிக்கை எடுக்காததால் இன்று 2-வது கட்டமாக போராட்டம் நடத்துகிறோம் என்றனர்.
கிராம மக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்துவது பற்றி தெரியவந்ததும், பாலமேடு சப்-இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதன்பிறகு சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க உதவி புரிவதாக போலீசார் உறுதியளித்தனர். அதனை ஏற்று கிராம மக்கள் கலைந்து சென்றனர்.