கொள்ளையர்கள் மதுரை சிறையில் அடைப்பு
- ராமேசுவரம் கடலில் தங்க கட்டிகளை வீசிய கொள்ளையர்கள் மதுரை சிறையில் அடைக்கப்பட்டனர்.
- இதையடுத்து அங்கு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
மதுரை
ராமேசுவரம் கடல் பகுதியில் தங்கம் கடத்தி வரப்படுவதாக தூத்துக்குடி மத்திய வருவாய் புலனாய்வுத் துறைக்கு தகவல் வந்தது. இதையடுத்து அங்கு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது நாட்டுப் படகில் தங்கம் கடத்தி வந்த நாகூர் ஹனி (32), முகமது சமீர் (29), முகமது இப்ராஹிம் மகன் சகுபர் சாதிக் (22) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் நடுக் கடலில் வீசிய ரூ. 150 கோடி மதிப்புடைய 17.74 கிலோ தங்க கட்டிகள் கைப்பற்றப்பட்டன.
பிடிபட்ட 3 பேரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. தங்கம் கடத்தலில் மேலும் 3 பேருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு போலீசார் அதிரடி தேடுதல் வேட்டை நடத்தினர். அவர்கள் கொடைக்கானலில் இருந்து தப்பி வந்து மதுரையில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கி இருப்பது தெரிய வந்தது. அவர்களை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து விசாரித்தனர்.
அவர்கள் ஜஹாங்கீர் அப்பாஸ் (29), முகமது சாதிக் (33), அசாருதீன் (25) என்பது தெரிய வந்தது. 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். ராமேசுவரம் கடலில் தங்கம் கடத்தி வந்த மேற்கண்ட 6 பேரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.