கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறி; சிறுவன் உள்பட 3 பேர் கைது
- வெற்றிலை வியாபாரியிடம் கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறி செய்த சிறுவன் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
- அவரிடம் இருந்து ரூ5,115 பணம் மற்றும் செல்போனையும் பறித்துக்கொண்டு தப்பினர்.
மதுரை
மதுரை மாவட்டம் சோழவந்தான் மாரியம்மன் கோவில் பின்புறம் பகுதியை சேர்ந்தவர் செல்லப் பாண்டி(வயது 60). வெற்றிலை வியாபாரியான இவர் தினமும் நகரி வழியாக சித்தாலங்குடி, குமாரம் ஆகிய கிராமங்களுக்கு சென்று வியாபாரம் செய்து வருகிறார்.
அதன்படி சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் வெற்றி லைகளை ஏற்றிக்கொண்டு செல்லப்பாண்டி வியாபாரத்திற்கு புறப்பட்டார்.
தோடனேரி விலக்கில் சென்றபோது, 3வாலிபர்கள் திடீரென மோட்டார் சைக்கிளை மறித்தனர். பின்னர் கத்தியை காட்டி மிரட்டி செல்லப்பாண்டியிடம் இருந்த ரூ5,115 பணம் மற்றும் செல்போனையும் பறித்துக்கொண்டு தப்பினர்.
இதுகுறித்த புகாரின் பேரில் சமயநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் டேவிட் ரவிராஜன், சப்-இன்ஸ்பெக்டர் தியாக ராஜன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில் தேனூர் பாலத்தில் நேற்று போலீசார் வாகன சோதனை செய்த போது ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த 3பேரை பிடித்து தீவிர விசாரணை நடத்தினர்.
அதில் அவர்கள் செல்லப்பாண்டியிடம் பணம் மற்றும் செல்போன் பறித்தவர்கள் என்பது தெரியவந்தது. தொடர் விசாரணையில் அவர்கள் தோடனேரியை சேர்ந்த ஜெயசூர்யா(வயது24), சமயநல்லூர் அமீர்(18) மற்றும் 16வயது சிறுவன் என தெரியவந்தது. அவர்கள் 3பேரையும் போலீசார் கைது செய்தனர்.