- வாடிப்பட்டி அருகே மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.
- தாசில்தார் மூர்த்தி தொடங்கி வைத்தார்.
மதுரை
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள நெடுங்குளத்தில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பெட்கிராட் மற்றும் ஜி.எச்.சி.எல். பவுண்டேஷன் சார்பில் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. நெடுங்குளம் கிராமத்தில் மரக்கன்றுகள் வழங்கும் விழாவுக்கு பெட்கிராட் தொண்டு நிறுவன நிர்வாக இயக்குநர் எம்.சுப்புராம் தலைமை தாங்கினார். பொருளாளர் கிருஷ்ணவேணி முன்னிலை வகித்தார். பொதுச்செயலாளர் அங்குசாமி வரவேற்றார். இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட வாடிப்பட்டி வட்ட தாசில்தார் மூர்த்தி மரக்கன்றுகளை நட்டு விழாவை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் ''பிளாஸ்டிக்கை ஒழிப்போம்'' என்ற வாசகம் பொறிக்கப்பட்ட மஞ்சப்பை மற்றும் 200-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை வழங்கப்பட்டது. ஜி.எச்.சி.எல். பவுண்டேஷன் அலுவலர் சுஜின் தர்மராஜ் நெடுங்குளம் கிராமத்திற்கு பல்வேறு பயிற்சிகளையும், உதவிகளையும் பவுண்டேஷன் சார்பில் செய்து வருவதாக பேசினார். நெடுங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் சுப்பிரமணி வாழ்த்தி பேசினார். பின்னர் நெடுங்குளம் கண்மாய்கரை ஓரங்களில் மரக்கன்றுகளை நட்டனர். முடிவில் பெட்கிராட் துணைத் தலைவர் மார்ட்டின் லூதர்கிங் நன்றி கூறினார். பின்னர் சமயநல்லூரில் உள்ள மீனாட்சி மில் வளாகத்தில் 50 மரக்கன்றுகள் நடப்பட்டன.