உள்ளூர் செய்திகள்

மதுரை தெற்குவெளி வீதியில் உள்ள ஈ.வெ.ரா. நாகம்மையார் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு வந்த சிறுவர்-சிறுமிகளுக்கு ஆசிரியர்கள் இனிப்பு வழங்கினர்.

மகிழ்ச்சியுடன் பள்ளிக்கு வந்த மாணவ-மாணவிகள்

Published On 2022-06-13 09:37 GMT   |   Update On 2022-06-13 09:37 GMT
  • இன்று மாணவ-மாணவிகள் பள்ளிக்கு வந்தனர்.
  • வாழை-பலூன் தோரணங்கள் கட்டி ஆசிரியர்கள் இனிப்பு வழங்கி வரவேற்றனர்.

மதுரை

தமிழ்நாட்டில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பள்ளி வகுப்புகள் நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் ஆன்லைன் வகுப்புகள் மூலம் மாணவ-மாணவிகள் படித்து வந்தனர். அதன்பின்னர் கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து கடந்த ஆண்டு சில மாதங்கள் மட்டுமே பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்றது.

கடந்த மே மாதம் 14-ந் தேதி தேர்வுகள் முடிந்து மாணவ-மாணவிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டது. விடுமுைற முடிந்து இன்று (13-ந் தேதி) பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த ஒரு வாரமாக பள்ளி வளாகங்கள், வகுப்பறைகள் சுத்தம் செய்யப்பட்டன. மேலும் மாணவ-மாணவிகள் அமரும் பெஞ்சுகள் மற்றும் டெஸ்க் பழுது பார்க்கும் பணியும் நடைபெற்றது.

இந்த நிலையில் 2022-23 கல்வியாண்டு இன்று தொடங்கியுள்ளது. அதன்படி 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு இன்று பள்ளிகள் திறக்கப்பட்டன. அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் மாணவ-மாணவிகள் சேர்க்கையும் நடைபெற்றது.

இன்று பள்ளிகள் திறக்கப்பட்டதையொட்டி மாணவ-மாணவிகள் புத்தகபையை சுமந்து கொண்டு மகிழ்ச்சியுடன் பள்ளிகளுக்கு வந்தனர். மாணவர்களை மகிழ்விப்பதற்காக பல்வேறு பள்ளிகளில் வாழை மற்றும் பலூன் தோரணங்கள் கட்டப்பட்டிருந்தன.

நுழைவாயிலில் மலர் அலங்காரங்களும் செய்யப்பட்டிருந்தன. பள்ளிகளில் நுழைந்த மாணவ-மாணவிகளுக்கு ஆசிரியர்கள், ஆசிரியைகள் இனிப்பு மற்றும் பூங்கொத்து கொடுத்து இன்முகத்துடன் வரவேற்றனர். மாணவ-மாணவிகளும் மகிழ்ச்சியுடன் அவரவர் வகுப்புகளுக்கு சென்றனர்.

மதுரை மாவட்டத்தில் இன்று 2,166 பள்ளிகள் திறக்கப்பட்டது. இதில் 5 லட்சத்து 15 ஆயிரத்து 276 மாணவ-மாணவிகள் படிக்கின்றனர். மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ் சேகர், திருமோகூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைபள்ளிக்கு சென்று ஆய்வு செய்தார். அப்போது பள்ளிக்கு வந்த மாணவ-மாணவிகளுக்கு அவர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளை பெற்றோர்கள் அழைத்து வந்தனர். மேலும் தனியார் பள்ளி வாகனங்களிலும் மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் பள்ளிக்கு வருகை தந்தனர். பஸ் மற்றும் ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களில் ஏராளமான மாணவ-மாணவிகள் வருகை தந்தனர்.

இருசக்கர வாகனங்களிலும் மற்றும் சைக்கிள்களிலும் சில மாணவ-மாணவிகள் வந்தனர். அவர்கள் இன்று மிகவும் மகிழ்ச்சியுடன் காணப்பட்டனர். முதல் நாளான இன்று மாணவ- மாணவிகளுக்கு நன்னெறி மற்றும் புத்துணர்வு பயிற்சி அளிக்கப்பட்டன.

இதனால் மாணவ-மாணவிகள் வகுப்றைகளில் மகிழ்ச்சியுடன் காணப்பட்டனர். பல்வேறு பள்ளிகளில் பாடபுத்தகங்களும் வழங்கப்பட்டன. இன்று பள்ளிகள் தொடங்கியதை அடுத்து சாலைகளிலும் வாகன போக்குவரத்து அதிகளவில் காணப்பட்டது.

Tags:    

Similar News