சொர்க்கவாசல் வழியாக பக்தர்கள் வெள்ளத்தில் எழுந்தருளிய சுந்தரராஜ பெருமாள்
- கள்ளழகர் கோவிலில் இன்று சொர்க்கவாசல் வழியாக பக்தர்கள் வெள்ளத்தில் சுந்தரராஜ பெருமாள் எழுந்தருளினார்.
- கூடலழகர் பெருமாள் கோவிலில் இன்று இரவு சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது.
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு மதுரை கூடலழகர் பெருமாள் கோவிலில் பெருமாள் சயன கோலத்தில் காட்சியளித்தார்.
அலங்காநல்லூர்
108 வைணவ தேசங்களில் ஒன்றான பிரசித்தி பெற்ற அழகர் கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் வருடந்தோறும் வைகுண்ட ஏகாதசி விழா விமரிசையாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான விழா கடந்த மாதம் 23-ந் தேதி தொடங்கியது. பகல் பத்து உற்சவத்தை முன்னிட்டு தினமும் சுவாமி-அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
விழாவின் சிகர நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பு இன்று நடந்தது. இதையொட்டி அதிகாலை யில் கோவில் நடை திறக்கப்பட்டு சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. பின்னர் காலை 6.25 மணிக்கு உற்சவர் சுந்தரராஜ பெருமாள் வண்ணக்குடை, தீவட்டி பரிகாரங்களுடன் சொர்க்கவாசல் வழியாக எழுந்தருளினர். அப்போது நம்மாழ்வார் எதிர்கொண்டு வரவேற்றார்.
சொர்க்கவாசல் திறப்பின்போது அங்கு திரண்டிருந்த பக்தர்கள் "கோவிந்தா... கோவிந்தா..." என பக்தி கோஷமிட்டு சாமி கும்பிட்டனர். சொர்க்கவாசல் வழியாக சுவாமி -அம்பாள் சயன மண்டபத்தில் எழுந்தருளி னர்.
கள்ளழகர் கோவிலின் உப கோவிலான மதுரை தல்லாகுளத்தில் உள்ள பிரசன்ன வெங்கடாசலபதி பெருமாள் கோவிலில் இன்று காலை சொர்க்க வாசல் திறப்பு நடந்தது. சொர்க்கவாசல் வழியாக பெருமாள் அருள்பாலித்தார். வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இன்று அதிகாலை முதலே கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
மதுரை நகரில் உள்ள கூடலழகர் பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இன்று சுவாமி-அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தனர். இன்று காலை முதல் திரளான பக்தர்கள் குவிந்து சாமி கும்பிட்டனர். இன்று இரவு 7.15 மணிக்கு மேலவடம்போக்கி தெருவில் உள்ள சொர்க்கவாசல் வழியாக கூடலழகர் பெருமாள் எழுந்தருளுகிறார்.
இதேபோல் மதுரை தெற்கு கிருஷ்ணன் கோவில் தெருவில் உள்ள பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில், மதனகோபால சுவாமி கோவிலில் இன்று மாலை சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடக்கிறது.