- அதிகார வரம்புக்கு மீறி செயல்பட்டதாக தாசில்தார் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.
- மதுரை கலெக்டர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
மதுரை
மதுரை திருப்பாலையைச் சேர்ந்தவர் சதாசிவம். இவரது 2-வது மகன் ஜெயபிரகாஷ். இவர் கோவையில் மத்திய அரசு அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார். ஜெயபிரகாஷ் நகை, பணம், சொத்துக்களை ஏமாற்றி அபகரித்ததாக, பெற்றோர் மற்றும் முதியோர் நலன் பராமரிப்பு சட்டத்தின் கீழ் புகார் மனு ஒன்றை கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்து இருந்தார்.
சதாசிவம் கொடுத்த புகார் மனு தொடர்பாக மதுரை வருவாய் கோட்டாட்சியர் விசாரணைக்கு உத்தர விடப்பட்டது. இதன் மீதான விசாரணைக்கு வந்திருந்த சதாசிவத்திடம், பெற்ற மகன் மீது புகார் கொடுத்து உள்ளீர்கள். இது தவறு என்று அதிகாரி ஒருவர் அறிவுரை கூறியதாக தெரிகிறது.
இந்த நிலையில் சதாசிவம் சம்பந்தப்பட்ட அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார். இதன் அடிப்படையில் கலெக்டர் விசாரணை நடத்தினார். அப்போது மதுரை வருவாய் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளரும், தாசில்தா ருமான செல்வராஜன் என்பவர் மேற்கண்ட செயலில் ஈடுபட்டது தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து அதிகார வரம்புக்கு மீறி செயல்பட்டதாக தாசில்தார் செல்வராஜனை தற்காலிக பணிநீக்கம் செய்து கலெக்டர் அனீஷ் சேகர் உத்தரவிட்டுள்ளார்.