உள்ளூர் செய்திகள்

புதிய தார்சாலை மேம்பாட்டு பணியை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார். அருகில் வெங்கடேசன் எம்.எல்.ஏ. உள்பட பலர் உள்ளனர். 

ரூ.5.28 கோடி மதிப்பில் தார் சாலை மேம்பாட்டு பணி

Published On 2023-04-26 07:23 GMT   |   Update On 2023-04-26 07:23 GMT
  • மதுரை மாவட்டத்தில் ரூ.5.28 கோடி மதிப்பில் தார் சாலை மேம்பாட்டு பணி நடந்து வருகிறது.
  • இதனை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார்.

மதுரை

மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் அமைச்சர் மூர்த்தி ரூ.5.28 கோடி மதிப்பீட்டில் 3 தார் சாலை மேம்பாட்டு பணிகளை தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் பேசியதாவது:-

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்கள் நலனுக்காக எண்ணற்ற அரசு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக பொதுமக்களின் அடிப்படை அத்தியாவசிய தேவைகளான குடிநீர் வசதி, சாலை வசதி, தெருவிளக்கு வசதி போன்ற திட்டப்பணிகளுக்கு முக்கியத்துவம் வழங்கி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களின் நலனை கருத்திற்கொண்டு பல்வேறு உட்கட்டமைப்பு வசதி மேம்பாட்டுப் பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

நாயக்கன்பட்டி கிராமத்தில் ரூ1.37கோடி மதிப்பீட்டில் 1.6கி.மீ நீளம், மாங்குளம் கிராமத்தில் ரூ2.04கோடி மதிப்பீட்டில் மாங்குளம் - காந்திநகர் வரை 2கி.மீ நீளம், வெள்ளியன்குன்றம் புதூர் கிராமத்தில் ரூ1.87கோடி மதிப்பீட்டில் விபுதூர் முதல் அந்தமான் சாலை வரை 2கி.மீ நீளம் என மொத்தம் ரூ5.28கோடி மதிப்பீட்டில் 5.6கி.மீ நீளம் உள்ள 3 தார்சாலைகள் மேம்பாட்டு பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.

இப்பணிகளை விரைவாகவும், தரமாகவும் நிறைவேற்றி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் குடிநீர் வசதி, தெருவிளக்கு வசதி, சாலை வசதி, மின்சார வசதி போன்ற அடிப்படை வசதிகள் வேண்டி பொது மக்கள் வழங்கும் கோரிக்கை மனுக்கள் மீது உடனடி தீர்வு காணவும் அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் சோழவந்தான் எம்.எல்.ஏ. வெங்கடேசன், மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியக்குழுத்தலைவர் மணிமேகலை, சோமசுந்தரபாண்டியன், வழக்கறிஞர் கலாநிதி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News