மல்லிகை பூக்கள் விலை இருமடங்கு உயர்வு
- நாளை முகூர்த்த நாள் என்பதால் மதுரையில் மல்லிகை பூக்கள் விலை இருமடங்கு உயர்ந்து உள்ளது.
- கிலோ ரூ.600-க்கு விற்பனை செய்யப்படுகிறது,
மதுரை
மலர்களின் கதாநாய கியாக திகழ்கிறது மதுரை மல்லிகை. முகூர்த்தம், திருவிழா, பண்டிகை காலங்களில் மல்லிகை இல்லாத நிகழ்ச்சிகளே இல்லை என்று சொல்லும் அளவுக்கு மல்லிகை பூக்களின் தேவை அதிகமாக காணப்படும். இதனால் முகூர்த்தம் மற்றும் சுப தினங்களில் மதுரையில் பொதுமக்கள் மல்லிகை பூக்களை ஆர்வத்துடன் வாங்கி செல்வது வழக்கம்.
கடந்த சில நாட்களாக முகூர்த்தம் மற்றும் திருவிழாக்கள், சுப நிகழ்ச்சிகள் குறைந்த காரணத்தால் மல்லிகை பூக்கள் மிகக் குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டன. 200 ரூபாய் முதல் 300 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டன. மல்லிகை பூக்களை வாங்குவதற்கும் மக்கள் அதிக ஆர்வமின்றி காணப்பட்டனர்.
பூக்களின் வரத்து அதிகமாக இருந்ததால் வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் உரிய விலை கிடைக்காமல் கவலை தெரிவித்தனர். இந்த நிலையில் நாளை முகூர்த்த நாள் என்பதால் மதுரையில் மல்லிகை பூவுக்கு திடீர் கிராக்கி ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக நேற்று 300 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ மல்லிகை பூக்கள், இன்று இருமடங்கு விலை உயர்ந்து கிலோ 600 ரூபாயாக விற்பனையானது.மற்ற பூக்களான முல்லை ஒரு கிலோ 400 ரூபாய்க்கும், பிச்சி 500 ரூபாய்க்கும், சம்பங்கி 120 ரூபாய்க்கும், செண்டுமல்லி 100 ரூபாய்க்கும், பட்டன் ரோஸ் 200 ரூபாய்க்கும், மரிக்கொழுந்து 120 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டன.
நாளை முகூர்த்த நாள் என்பதால் அனைத்து பூக்களின் விலைகளும் சற்று உயர்ந்திருப்பதாக வியாபாரிகள் தெரி வித்தனர். பொதுமக்களும் பூக்களை வாங்க அதிக அளவில் மார்க்கெட்டுகளில் திரண்டதால் விற்பனை அதிகமாக நடைபெற்றது.