பாதாள சாக்கடைகள் அடிக்கடி நிரம்பி சாலையில் ஓடும் கழிவுநீர்
- பாதாள சாக்கடைகள் அடிக்கடி நிரம்பி சாலையில் கழிவுநீர் ஓடுவதால் பொதுமக்கள் அவதியடைகின்றனர்.
- சாலைகளில் தேங்காதவாறும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
மதுரை
மதுரை மாநகரின் முக்கிய போக்குவரத்து சந்திப்பாக காளவாசல் உள்ளது. மதுரையில் இருந்து மேற்கு நோக்கி செல்லும் வாகனங்கள் அனைத்தும் காளவாசல் சந்திப்பை கடந்தே தேனி மெயின் ரோடு வழியாக செல்ல வேண்டும். அந்த பகுதி முழுவதும் கடைகள், வணிக நிறுவனங்கள் நிரம்பி இருக்கின்றன.
மேலும் உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி, தேனி, கம்பம் மற்றும் கேரளா செல்லும் புறநகர் பஸ் களும் இங்கு நிறுத்தியே பயணிகளை ஏற்றி செல்கின்றனர். இதனால் அந்த பகுதி எப்போதும் போக்குவரத்து நெரிசல் மற்றும் மக்கள் நெரிசலுடன் காணப்படும். இந்த நிலையில் காளவாசல் சந்திப்பு அருகில் தேனி மெயின் ரோடு பகுதியில் உள்ள பாதாள சாக்கடைகள் அடிக்கடி நிரம்பி கழிவுநீர் சாலையில் ஆறாக ஓடுகிறது. இதனால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள், கடைகள் வைத்துள்ள வியாபாரிகள் அவதியடைகின்றனர்.
அவ்வப்போது பாதாள சாக்கடைகள் அடைப்பு நீக்கி சரி செய்யப்பட்டாலும் மீண்டும் நிரம்பி கழிவுநீர் சாலையில் செல்கிறது. மதுரை மாநகராட்சியின் உயர் அதிகாரிகள் இந்த சாலை வழியாகத்தான் அடிக்கடி சென்று வருகின்றனர். இருப்பினும் இதற்கு நிரந்தர தீர்வு ஏற்படவில்லை. இதனால் அந்த பகுதியில் பஸ் நிறுத்ததிற்கு நடந்து செல்ல பயணிகள் சிரமப்படு கின்றனர்.
மேலும் சாலை யோரத்தில் வாகனங்களை நிறுத்துபவர்களும், பொருட்கள் வாங்க வரும் வாடிக்கையாளர்களும் மூக்கை பிடித்தப்படி செல்லும் நிலை உள்ளது. எனவே அதிகாரிகள் இதனை கவனத்தில் எடுத்து அந்த பகுதியில் உள்ள பாதாள சாக்கடைகளின் அடைப்பை முழுமையாக நீக்கி கழிவுநீர் சீராக செல்லவும், சாலைகளில் தேங்காதவாறும் நடவ டிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.