சேதமடைந்த வகுப்பறையில் சமையல் செய்யும் அவலம்
- சேதமடைந்த வகுப்பறையில் சமையல் செய்யும் அவலம் ஏற்பட்டுள்ளது.
- குழந்தைகளின் நலன்கருதி விரைவில் பணிகளை செய்து முடிக்க அதிகாரிகள் முன்வரவேண்டும் என்றார்.
திருமங்கலம்
திருமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சுங்குராம்பட்டி கிராமம் உள்ளது. வடகரை பஞ்சாயத்திற்குட்பட்ட இந்த கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. 2 ஆசிரியர்கள் உள்ளனர். 50 மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள அங்கன்வாடி மையத்தில் 25 குழந்தைகள் படித்து வருகின்றனர். இதில் ஒரு ஆசிரியரும், சமையலரும் உள்ளனர். சில வாரங்களுக்கு முன்பு பெய்த மழையில் அங்கன்வாடி மைய சமையல் அறை இடிந்து விழுந்தது. இதனால் குழந்தைகளுக்கு சமையல் செய்ய இயலவில்லை.
இதனை தொடர்ந்து அங்கன்வாடி மையத்திற்குள் குழந்தைகள் படிக்கும் அறையில் தற்போது சமையல் பணிகள் நடந்து வருகின்றன. இதே போல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஓட்டு கட்டிடங்கள் மழைக்கு ஒழுகத் தொடங்கியதால் மழைகாலங்களில் மாணவ-மாணவிகள் திறந்தவெளியில் அமர்ந்து படிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து வடகரை பஞ்சாயத்து கவுன்சிலர் பெரியகருப்பன் கூறுகையில், அங்கன்வாடி மையத்தின் சமையல் அறை சேதம் மற்றும் பள்ளிக்கட்டிடம் மழைநீருக்கு ஒழுகுவது குறித்து ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புகார் தெரிவித்துள்ளேன். பஞ்சாயத்திலும் தகவல் கூறியுள்ளேன். குழந்தைகளின் நலன்கருதி விரைவில் பணிகளை செய்து முடிக்க அதிகாரிகள் முன்வரவேண்டும் என்றார்.