உள்ளூர் செய்திகள்

பெரியார் பஸ் நிலையம் அருகில் சிக்னல் இல்லாத நேரத்தில் வாகன ஓட்டிகள் இடதுபுறமாக செல்லக்கூடாது என்ற தடை அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளதை காணலாம்.

பெரியார் பஸ் நிலையம் அருகில் பயணிகள் ரோட்டை கடக்கும்போது வாகனங்கள் இடதுபுறம் செல்ல தடை

Published On 2022-09-12 07:18 GMT   |   Update On 2022-09-12 07:18 GMT
  • பெரியார் பஸ் நிலையம் அருகில் பயணிகள் ரோட்டை கடக்கும்போது வாகனங்கள் இடதுபுறம் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
  • போக்குவரத்து போலீசாரின் இந்த நடவடிக்கைக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

மதுரை

மதுரை சென்னைக்கு அடுத்து முக்கிய நகரமாக விளங்குகிறது. தென் மாவட்ட மக்கள் அதிக அளவில் மதுரைக்கு வருகை தருகின்றனர். தினமும் 1 லட்சத்துக்கும் அதிகமான வெளியூர் மக்கள் மதுரை வந்து செல்கின்றனர்.

இந்த நிலையில் மதுரை பெரியார் பஸ் நிலையத்துக்கு பயணிகள் சாலையை கடந்து செல்ல முடியாத அளவுக்கு வாகன போக்குவரத்து உள்ளது. இங்குள்ள சிக்னலில் சிகப்பு விளக்கு எரியும் போதும் வாகன ஓட்டிகள் இடது புறமாக தொடர்ந்து செல்வதால் ரெயில் நிலையத்திலிருந்து வரும் பயணிகள் பெரியார் பஸ் நிலையத்துக்கு செல்ல முடியாத நிலைமை இருந்து வந்தது. அணிவகுத்து வரும் வாகனங்களுக்கு இடையே மக்கள் சாலையை கடக்க முடியாமல் அவதிப்பட்டு வந்தனர்.

இது பற்றி மாலைமலரில் செய்தி வெளியானது. இதை தொடர்ந்து போக்குவரத்து போலீசார் பெரியார் பஸ் நிலையம் அருகில் பயணிகள் சாலையை கடந்து செல்லும் இடத்தில் சிக்னல் நேரத்தில் வாகன ஓட்டிகள் இடது புறமாக செல்ல தடை விதித்து அறிவிப்பு பலகை வைத்துள்ளனர். இந்த நடவடிக்கை காரணமாக பொதுமக்கள் சிரமம் இல்லாமல் பஸ் நிலையத்துக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து போலீசாரின் இந்த நடவடிக்கைக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

இருந்த போதிலும் வேகமாக வரும் வாகன ஓட்டிகள் பலர் வழக்கம்போல் சிக்னல் நேரத்தில் இடது புறம் செல்கின்றனர். இதனால் இந்த பிரச்சினை முழுவதுமாக தீர்ந்தபாடில்லை.

எனவே காலை, மாலை நேரங்களில் அந்த இடத்தில் போக்குவரத்து போலீசார் நின்று வாகன ஓட்டிகள் விதிமுறைகளை சரியாக கடைபிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். விதிமுறைகளை கடைபிடிக்காத வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News