உள்ளூர் செய்திகள்

அக்னிபாத் வீரர்களுக்கு எதிர்காலம் இருக்குமா?வெங்கடேசன் எம்.பி. கேள்வி

Published On 2022-07-24 09:07 GMT   |   Update On 2022-07-24 09:07 GMT
  • அக்னிபாத் வீரர்களுக்கு எதிர்காலம் இருக்குமா? என வெங்கடேசன் எம்.பி. கேள்வி எழுப்பி உள்ளார்.
  • அதற்கு மத்திய பாதுகாப்பு இணை மந்திரி அஜய் பட் கொடுத்த தகவல் அதிர்ச்சி அளிக்கிறது.

மதுரை

மதுரை பாராளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அக்னிபாத் இளைஞர்களின் எதிர்காலம் எப்படி இருக்கும்? என்பதை தெரிந்து கொள்ள விரும்பினேன். நாடாளுமன்றத்தில் 'முன்னாள் ராணுவத்தினருக்கு எத்தனை சதவீதம் மறு வேலைவாய்ப்பு இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது? அரசு பணியிடங்களில் மறு வேலை வாய்ப்பு பெற்ற முன்னாள் ராணுவத்தினர் எத்தனை சதவீதம் உள்ளனர்?" என்று கேள்வி எழுப்பினேன்.

அதற்கு மத்திய பாதுகாப்பு இணை மந்திரி அஜய் பட் கொடுத்த தகவல் அதிர்ச்சி அளிக்கிறது.

மத்திய அஞ்சல் சேவை, ஆயுதப் படையில் குரூப் "சி''- 10 சதவீதம், குரூப் டி-20 சதவீதம், மத்திய ஆயுதப் படையில் அசிஸ்டென்ட் கமாண்டன்ட் வரை நேரடி நியமனங்களில் 10 சதவீதம், மத்திய பொதுத் துறை நிறுவனங்கள், வங்கிகளில் குரூப் சி - 14.5 சதவீதம், குரூப் டி - 24.5 சதவீதம் என்ற அளவில் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது.

இதன் அடிப்படையில் 2014-ம் ஆண்டு - 2322 பேர், 2015-ல் 10,982 பேர், 2016-ல் 9086 பேர், 2017-ல் 5638 பேர், 2018-ல் 4175 பேர், 2019-ல் 2968 பேர், 2020-ல் 2584 பேர், 2021-ல் 2983 பேர் என்று முன்னாள் ராணுவத்தினர் பணி நியமனம் பெற்று உள்ளனர்.

குறிப்பாக 2015, 2016 ஆகிய 2 ஆண்டுகளில் கிடைத்த வேலைவாய்ப்பு எண்ணிக்கையோடு, 2017 - 2021 ஆகிய 5 ஆண்டுகளின் விவரங்களை ஒப்பிடும் போது பெரும் சரிவு தென்படுகிறது. கடந்த 2015-களில் 10 ஆயிரத்தை தாண்டி இருந்த வேலை வாய்ப்புகள், 2019- 2021க்கு இடைப்பட்ட 3 ஆண்டுகளில் தலா 3 ஆயிரத்தை கூட தாண்டவில்லை.

அரசு நிர்ணயித்த இடஒதுக்கீடு எவ்வளவு சதவீதம் நிரப்பப்பட்டு உள்ளது? என்று பார்த்தால், அந்த தகவல்கள் அதிர்ச்சியின் உச்சமாக உள்ளது.

மத்திய சிவில் சேவைகள்-அஞ்சல் துறையில் குரூப் சி-1.39 சதவீதம், குரூப் டி-2.77 சதவீதம், மத்திய பொது நிறுவனங்களில் குரூப் சி-1.14 சதவீதம், குரூப் டி- 0.37 சதவீதம், பொதுத் துறை வங்கிகளில் குரூப் சி - 9.10 சதவீதம், குரூப் டி-21.34 சதவீதம், மத்திய ஆயுதப் படையில் குரூப் "ஏ"-2.20 சதவீதம், குரூப் "பி"-0.87 சதவீதம், குரூப் "சி"-0.47 சதவீதம், குரூப் "டி"-0.00 சதவீதம் என்று உள்ளது.

அரசு வங்கிகள் தவிர மற்ற இடங்களில் முன்னாள் ராணுவத்தினரின் அதிகபட்ச சதவீதம் 3 கூட தாண்டவில்லை. ஜீரோ சதவீதமாக உள்ளது. ஏற்கெனவே உள்ள முன்னாள் ராணுவத்தினர் நிலை இப்படித்தான் உள்ளது. மறு வேலை வாய்ப்பு இல்லை.

ராணுவப் பணியின் கடைசி ஊதியம், புதிய பணி நியமனத்தில் பாதுகாக்கப்படுவது இல்லை. 20 ஆண்டு ராணுவப்பணி முடித்து வந்தவர்களின் நிகழ்கால கதியே இது என்றால் 4 ஆண்டு ஒப்பந்த அக்னிபாத் வீரர்கள் எதிர்காலம்தான் என்ன?

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News