மகளிர் உரிமைத்தொகை ரூ.1,000 திட்டம்-நெல்லை மாநகரில் வீடு, வீடாக டோக்கன் வினியோகம் தொடங்கியது
- கடந்த வாரம் புறநகர் பகுதிகளில் வீடு வீடாக விண்ணப்பங்கள் மற்றும் டோக்கன்கள் விநியோகம் செய்யப்பட்டது.
- 55 வார்டுகளிலும் கலைஞர் உரிமைத்தொகைக்கான விண்ணப்பங்கள் மற்றும் டோக்கன் வீடு, வீடாக சென்று அவர்கள் வழங்கினர்.
நெல்லை:
தி.மு.க. சார்பில் கடந்த சட்டமன்ற தேர்தலின் போது ஆட்சிக்கு வந்தவுடன் மகளிர்க்கு ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி கடந்த மாதம் மகளிருக்கு மாதம் தோறும் ரூ.1,000 வழங்குவதற்கான நிபந்தனைகள் அறிவிக்கப்பட்டு தொடர்ந்து தமிழகம் முழுவதும் வீடு வீடாக மகளிர் உதவி தொகைக்கான விண்ணப்பங்கள் வினியோகம் மற்றும் டோக்கன் விநியோகம் செய்யும் பணி தொடங்கியது. கடந்த வாரம் அனைத்து மாவட்டங்களிலும் புறநகர் பகுதிகளில் சென்று வீடு வீடாக விண்ணப்பங்கள் மற்றும் டோக்கன்கள் விநியோகம் செய்யப்பட்ட நிலையில் இன்று முதல் மாநகர பகுதிகளில் டோக்கன்கள் மற்றும் விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்பட்டது.
நெல்லை மாநகர பகுதியில் இதற்கென கூட்டுறவு பணியாளர்கள், ரேஷன் கடை பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
வீடு, வீடாக...
குழுக்களாக பிரிந்து மாநகரப் பகுதியில் உள்ள 55 வார்டுகளிலும் கலைஞர் உரிமைத்தொகைக்கான விண்ணப்பங்கள் மற்றும் டோக்கன் வீடு, வீடாக சென்று அவர்கள் வழங்கினர். இன்று வண்ணார்பேட்டை, கொக்கிரகுளம், சாலை தெரு, மீனாட்சிபுரம், சிந்து பூந்துறை உள்ளிட்ட பகுதிகளில் வீடு, வீடாக டோக்கன்கள் வினியோகிக்கப்பட்டது. தொடர்ந்து அந்த டோக்கன்களில் எந்தெந்த தேதிகளில் யார்-யார் வர வேண்டும் என்பது குறித்த அறிவுறுத்தல்கள் எழுதப்பட்டி ருந்தது.
அதன்படி குறித்த நேரத்தில் பெண்கள் தங்கள் பகுதிக்கு உட்பட்ட ரேஷன் கடைகளுக்கு சென்று விண்ணப்பத்தை நிரப்பி வழங்குவதற்கு தேவையான ஏற்பாடுகளை மாவட்டம் நிர்வாகம் செய்து வருகிறது.