ஆனைமலை அருகே விளைநிலங்களில் மீண்டும் புகுந்த மக்னா யானை
- பிப்ரவரி மாதம் வனப்பகுதியை விட்டு வெளியேறி ஊருக்குள் நுழைந்தது.
- சின்னதம்பி, சுயம்பு என்ற 2கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளன.
பொள்ளாச்சி,
தருமபுரி மாவட்டத்தில் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப் பட்ட மக்னா யானை ஆனைமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் விடப்பட்டது. அதன் பின்னர் கடந்த பிப்ரவரி மாதம் 22-ந் தேதி வனப்பகுதியை விட்டு வெளியேறி ஊருக்குள் நுழைந்து கோவையை நோக்கிச் சென்றது.
இங்கு மீண்டும் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டு ரேடியோ காலர் கருவி பொருத்தப்பட்டு, மானாம்பள்ளியில் உள்ள மந்திரிமட்டம் வனப்பகுதியில் விடப்பட்டது. ரேடியோ காலர் கருவி பழுதாகி விட்டதால் யானையின் நகர்வை கண்காணிக்க முடியாமல் வனத்துறையினர் திணறி வருகின்றனர்.
இந்நிலையில், மக்னா யானை சரளபதி கிராமத்தில் உள்ள விவசாயத் தோட்டத்தில் நுழைந்து பயிர்களை சேதப்படுத்தியது. யானை குடியிருப்பு பகுதிக்குள் வராமல் இருக்க வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மக்னா யானையை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்ட கோழிகமுத்தி யானைகள் முகாமில் இருந்து கும்கி யானைகளான சின்னதம்பி, சுயம்பு ஆகிய இரு யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளன.
யானையின் நடமாட்டம் உள்ள பகுதியில் முகாமிட்டுள்ள வனத்துறையினர் கும்கி யானைகள் உதவியுடன் மக்னாவை வனப்பகுதிக்குள் விரட்ட தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.