நாளை மகாளய அமாவாசை : பூக்கள் விலை கடும் உயர்வு - மல்லிகை ரூ.1000க்கு விற்பனை
- புரட்டாசி மாதம் மற்றும் விஷேச தினங்கள் இல்லாதது எதிரொலியாக பூக்கள் விற்பனை மந்தமாக இருந்து வந்தது.
- மகாளய அமாவாசையை முன்னிட்டு பூக்களின் விலை அதிகரித்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் அண்ணா வணிக வளாகத்தில் செயல்பட்டு வரும் பூ மார்க்கெட்டிற்கு நிலக்கோட்டை, செம்பட்டி, வெள்ளோடு, மைலாப்பூர், ரெட்டியார் சத்திரம், ஜம்புலியம்பட்டி, ஆத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பூக்கள் அதிகளவு விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.
இங்கிருந்து கேரளா, கோவை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. திண்டுக்கல் பூ மார்க்கெட்டிற்கு குறைந்தது 10 டன் பூக்களும் விஷேச தினங்களில் 40 டன் பூக்கள் வரையும் வரத்து உள்ளது. தற்போது புரட்டாசி மாதம் மற்றும் விஷேச தினங்கள் இல்லாதது எதிரொலியாக பூக்கள் விற்பனை மந்தமாக இருந்து வந்தது. இதனால் பூக்கள் விலை கடுமையாக சரிந்து காணப்பட்டது. பூ மார்க்கெட் வெறிச்சோடி யது. மாலைக்கு பயன்ப டுத்தும் பூக்கள் ரூ. 10 முதல் 20 வரை மட்டுமே விலைபோனது.
இந்நிலையில் நாளை மகாளய அமாவாசையை முன்னிட்டு பூக்களின் விலை கிடுகிடு என உயர்ந்துள்ளது. திண்டுக்கல் மார்க்கெட்டிற்கு 40 டன் பூக்கள் வந்துள்ளது. ஒரு கிலோ சாமந்தி மற்றும் சம்மங்கி ரூ.60க்கும், கோழிக்கொண்டை ரூ. 30, அரளி ரூ. 200, ரோஸ் ரூ. 50, கனகாம்பரம் ரூ. 200, ஜாதி பூ ரூ.300, முல்லை ரூ. 300க்கும் விற்கப்படுகிறது.
திண்டுக்கல் மாவட்ட த்தில் பரவலாக பருவமழை கடந்து சில நாட்களாக பெய்து வருகிறது. இதனால் மல்லிகை பூக்கள் வரத்து கடுமையாக பாதிக்கப்பட்டு ள்ளது. பூ மார்க்கெட்டிற்கு 1½டன் பூக்கள் மட்டுமே வரத்து வந்துள்ளது.
இதனையடுத்து கிலோ ரூ. 800 முதல் 1000 வரை விற்கப்பட்டது.கடந்த சில தினங்களாக பூக்கள் விற்பனை மந்தமாக இருந்தது. இந்நிலையில் மகாளய அமாவாசையை முன்னிட்டு பூக்களின் விலை அதிகரித்துள்ளது. இதனால் வியாபாரிகள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.