உவரி அருகே வாலிபர் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்தவர் மனைவியுடன் கைது
- சுபாசுக்கும் மீனவர் ராஜா என்பவருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது.
- திருப்பூர் மாவட்டத்தில் ராஜா தலைமறைவாக இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
திசையன்விளை:
நெல்லை மாவட்டம் உவரி அருகே கூட்டப்பனை கிராமத்தை சேர்ந்தவர் சுடலைமாடன். இவருடைய மகன் சுபாஷ் என்ற மணி (வயது 26). தொழிலாளி.
கொலை
இவர் உவரியை சேர்ந்த ரசிகா என்ற பெண்ணை காதல் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். சுபாசுக்கும் கூட்டப்பனையை சேர்ந்த மீனவர் ராஜா என்பவருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. இதனால் சுபாசை கொலை செய்ய ராஜா திட்டம் தீட்டியுள்ளார்.
அதன்படி கடந்த பிப்ரவரி மாதம் சுபாசுடன் நட்பு பாராட்டி அவரை ராஜா வீட்டிற்கு விருந்திற்கு அழைத்துள்ளார். அங்கு சென்ற சுபாசிற்கு மதுவிருந்து கொடுத்து அவர் மதுபோதையில் இருந்தபோது ராஜா, அவரது 2-வது மனைவி ஜோஸ்பின் சூசை வெஸ்பினா, ராஜாவின் சகோதரர்கள் தீபன் சிங், பிரவின் ஆகிய 4 பேரும் சேர்ந்து சுபாசை சரமாரியாக வெட்டிக்கொலை செய்தனர். பின்னர் அங்குள்ள காட்டுப் பகுதியில் உடலை வீசிவிட்டு சென்று விட்டனர்.
கைது
இந்த சம்பவம் குறித்து உவரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி கொலையாளிகளை தேடி வந்தனர். இந்த நிலையில் ராஜாவும், அவரது 2-வது மனைவியும் திருப்பூர் மாவட்டத்தில் தலைமறைவாக இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் பேரில் உவரி இன்ஸ்பெக்டர் பிரேமா, ஏட்டுகள் ரத்தின வேல், ரெனால்டு ஆகியோர் மாறுவேடத்தில் சென்று துப்புதுலக்கி அங்குள்ள ஒரு கோழிப்பண்ணையில் வேலை செய்து கொண்டிருந்த ராஜாவையும் அவரது 2-வது மனைவியையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் தீபன் சிங், பிரவின் ஆகியோர் ஏற்கனவே போலீசில் சரண் அடைந்துள்ளனர்.