பண மோசடி வழக்கில் தேடப்பட்டு வந்தவர் கைது
- வட்டியுடன் கடனை திருப்பி கொடுத்து விடுவதாக கூறி உள்ளார்.
- திருச்சி விமான நிலையத்தில் இருந்து மலேசியாவுக்கு தப்பி செல்ல முயன்றபோது பிடிபட்டார்.
நாகப்பட்டினம்:
மயிலாடுதுறை பகுதியை சேர்ந்தவர் அசலாம் (வயது43).
இவர் அதே பகுதியில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார்.
வியாபாரம் தொடர்பாக அசலாம் மலேசியாவுக்கு சென்று வரும்போது, சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் பட்டமங்க ளத்தை சேர்ந்த பில்லப்பன் (50) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.
இந்த நிலையில் பில்லப்பன் கடந்த 2014-ம் ஆண்டு மலேசியாவில் தனக்கு ரூ.500 கோடிக்கும் மேல் சொத்து இருப்பதாகவும், அதை விற்று பராமரிக்க வேண்டும் எனக்கூறி அசலாமிடம் ரூ.2 கோடியே 13 லட்சம் கடன் வாங்கி உள்ளார்.
அப்போது வட்டியுடன் கடனை திருப்பிக் கொடுத்து விடுவதாகவும் கூறி உள்ளார்.
இதேபோல பழக்கத்தின் பேரில் பூம்புகார் அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. ரங்கநாதனிடம் ரூ.28 லட்சம், உடற்பயிற்சி நிலைய உரிமையாளர் உதயகுமார் என்பவரிடம் ரூ.31 லட்சம், ஓய்வு பெற்ற அரசு ஊழியர் நவநீதிகிருஷ்ணன் என்பவ ரிடம் ரூ.10 லட்சம் என கடன் வாங்கி உள்ளார்.
முன்னாள் எம்.எல்.ஏ., தொழில் அதிபர்கள் உள்பட 4 பேரிடம் ரூ.2 கோடியே 80 லட்சத்துக்கும் அதிகமாக கடன் வாங்கி விட்டு அதை திருப்பி தராமல் பில்லப்பன் காலம் தாழ்த்தி வந்தார்.
இதனால் சந்தேகம் அடைந்த 4 பேரும் நாகை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் கடந்த 2015-ம் ஆண்டு புகார் அளித்தனர்.
புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இதுதொடர்பாக கடந்த 25.4.2022 அன்று நாகை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதை அறிந்த பில்லப்பன் தலைமறைவாகி விட்டார்.
போலீசார் பல இடங்களில் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
இதையடுத்து போலீசார் அனைத்து போலீஸ் நிலையங்கள் மற்றும் விமான நிலையங்களுக்கும் 'லுக் அவுட்' நோட்டீஸ் அனுப்பி தொடர்ந்து தேடும் பணியை மேற்கொண்டனர்.
இந்த நிலையில் கடந்த 8-ந் தேதி திருச்சி விமான நிலையத்தில் இருந்து மலேசியாவுக்கு தப்பி செல்ல முயன்றபோது, விமான நிலைய போலீசார் பில்லப்பனை பிடித்து, நாகை குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அவரை நேற்று முன்தினம் நாகை போலீசார் கைது செய்து அழைத்து வந்து விசாரணை மேற்கொண்ட னர்.
பின்னர் நாகை கோர்ட்டில் நீதிபதி நாகப்பன் முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.
அவரை வருகிற 22-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
அதன்படி போலீசார் பில்லப்பனை சிறையில் அடைத்தனர்.