மயிலாடுதுறை மாயூரநாதர் கோவிலில் மண்டலாபிஷேக விழா
- 1008 சங்குகளால் சுவாமி- அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
- ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறையில் திருவாவடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமான அபயாம்பிகை சமேத மாயூரநாதர் கோவில் உள்ளது.
சுமார் 1500 ஆண்டுகள் பழமையான இக்கோவிலில் கடந்த மாதம் கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
இதனை தொடர்ந்து, 48 நாட்கள் மண்டலாபிஷேக விழா நடைபெற்றது. தினமும் சுவாமி- அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், சகஸ்ரநாம அர்ச்சனைகள் செய்யப்பட்டது. தொடர்ந்து, நேற்று மண்டலாபிஷேக பூர்த்தி விழா நடைபெற்றது.
இதனை முன்னிட்டு நேற்று முன்தினம் யாகசாலை பூஜைகள் தொடங்கி நடைபெற்றது.
பூஜையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனிதநீர் அடங்கிய கடங்கள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, 1008 சங்குகளால் சுவாமி- அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை கள் நடைபெற்று, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
திருவாவடுதுறை ஆதீனம் 24-வது மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள் முன்னிலையில் நடைபெற்ற விழாவில் மாவட்ட கலெக்டர் மகாபாரதி மற்றும் பாடகசாலை தலைமை சிவாச்சாரியார் சுவாமிநாதன், ஆதீன கண்காணிப்பாளர் குருமூர்த்தி, கோவில் துணை கண்காணிப்பாளர் கணேசன், பொருளாளர் வெங்கடேசன் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.