சீர்காழி சட்டைநாதர் கோவிலில் மண்டலாபிஷேக பூர்த்தி விழா; தருமபுரம் ஆதீனம் பங்கேற்பு
- சட்டைநாதர் கோவிலில் கடந்த மே மாதம் கும்பாபிஷேகம் நடைபெற்று முடிந்தது.
- புனித நீர் அடங்கிய கடங்கள் வைக்கப்பட்டு சிறப்பு யாகம் நடந்தது.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட சட்டைநாதர் சாமி கோவில் உள்ளது.
இக்கோவிலில் திருநிலை நாயகி அம்மன் உடனடியாக பிரமபுரீஸ்வரர் சுவாமி அருள் பாலிக்கிறார். பிரசித்தி பெற்ற இக்கோயிலில் கடந்த மே மாதம் 24 -ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்று முடிந்தது.
இந்நிலையில் மண்டலாபிஷேகம் பூர்த்தி விழா கடந்த புதன்கிழமை தொடங்கி மூன்று நாள் நடைபெறுகிறது.
முதல் நாளாக ஆபத்து காத்த விநாயகர், சம்ஹார வேலர், அஷ்ட பைரவர், ருணம் தீர்த்த விநாயகர், கணநாதர், திருஞானசம்பந்தர் சுவாமி உள்ளிட்ட பரிவார தெய்வங்கள் சன்னதிகளுக்கு மண்டலாபிஷேக பூர்த்தி வழிபாடு நடந்தது.
முன்னதாக புனித நீர் அடங்கிய கடங்கள் வைக்கப்பட்டு சிறப்பு யாகம் தொடங்கியது.
வேத விற்பனர்கள் மந்திரம் முழங்க யாகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.
தொடர்ந்து தருமபுபுரம் ஆதீனம் 27-வது குரு மகா சந்திதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் புனித நீர் அடங்கிய கடங்கள் புறப்பட்டு மேள, தாளங்கள் முழங்க கோயிலை வலம் வந்து ஆபத்து காத்த விநாயகர், சம்ஹாரவேலர், அஷ்ட பைரவர் உள்ளிட்ட சுவாமிகளுக்கு புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாரதனை காட்டப்பட்டது.
இதில் திருப்பணி உபயதாரர்கள் மார்கோனி, சரண்ராஜ், முரளிதரன், சுரேஷ், மற்றும் நடராஜன் உள்ளிட்ட திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.