உள்ளூர் செய்திகள்

ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய குழு சாதாரணக்கூட்டம் நடைபெற்றது.

மங்கைமடம் டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும்

Published On 2023-06-01 09:56 GMT   |   Update On 2023-06-01 09:56 GMT
  • மானிய குழு திட்டத்தின் கீழ் ஒன்றிய உறுப்பினர்களுக்கு கூடுதலாக வளர்ச்சி பணிகள் வழங்க வேண்டும்.
  • சேதம் அடைந்த நிலையில் உள்ள திட்டை சாலையை சீரமைக்க வேண்டும்.

சீர்காழி:

சீர்காழி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய குழு சாதாரணக்கூட்டம் அவை கூடத்தில் நடைபெற்றது.கூட்டத்திற்கு ஒன்றிய குழு தலைவர் கமலஜோதி தேவேந்திரன் தலைமை வகித்தார்.

வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இளங்கோவன், சரவணன் முன்னிலை வகித்தனர். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வமுத்துகுமார் வரவேற்றார். தொடர்ந்து மன்ற பொருள்களை கணக்கர் சரவணன் வாசித்தார்.

கூட்டத்தில் உறுப்பினர்களிடையே நடந்த விவாதங்கள் வருமாறு,உறுப்பினர் பஞ்சு குமார்(திமுக) பேசுகையில், மணிக்கிராமம் ஊராட்சியில் சாலைக்கார தெரு, பள்ளி கூட தெரு ஆகிய தெருக்களில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது.

இதனை சரி செய்ய வேண்டும் இல்லையென்றால் பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபடுவார்கள்.

உறுப்பினர் நடராஜன் (அதிமுக) பேசுகையில் 15வது நிதி மானிய குழு திட்டத்தின் கீழ் ஒன்றிய உறுப்பினர்களுக்கு கூடுதலாக வளர்ச்சி பணிகள் வழங்க வேண்டும். கூட்டத்திற்கு வராத அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மங்கைமடம்கடைவீதியில் பொதுமக்களுக்கும், மாணவர்களுக்கும் இடையூறாக செயல்படும் டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்றார்.

உறுப்பினர் விஜயகுமார்(அதிமுக) பேசுகையில், சேதம் அடைந்த நிலையில் உள்ள திட்டை சாலையை சீரமைக்க வேண்டும். புதுத்துறை ஊராட்சிக்கு உட்பட்ட வெள்ளப்பள்ளம் கிராமத்தில் வாரத்திற்கு ஒரு நாள் மட்டுமே குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வேலைக்குச் செல்லாமல் குடிநீர் பிடிக்க வேண்டிய நிலை உள்ளது. இது குறித்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

உறுப்பினர் தென்னரசு (திமுக) பேசுகையில் எடக்குடி வடபாதி ஊராட்சியில் சேதம் அடைந்த நிலையில் உள்ள மயான கொட்டகை மற்றும் மண் சாலைகளை சீரமைத்து தர வேண்டும். ரேஷன் கடைகள் வாரம் முழுவதும் பொருள் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். என்றார்.

குடிநீர் வடிகால் வாரிய அதிகாரி :

ஊராட்சிகளில் அனுமதி இன்றி பலர் குடிநீர் இணைப்புகளை பெற்று குடிநீரை வீணாக்கி வருகின்றனர். இதன் காரணமாக குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது எனவே அனுமதி பெறாமல் இணைப்பு பெற்ற குடிநீர் இணைப்புகளை துண்டிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

உறுப்பினர் நிலவழகி பேசுகையில், எனது பகுதியில் புதிதாக அங்கன்வாடி மைய கட்டிடம் அமைத்து தர வேண்டும்.

கீழமூவர்கரை பகுதியில் புதிதாக ரேஷன் கடை அமைத்து தர வேண்டும் என்றார்.

தலைவர் கமலஜோதி தேவேந்திரன் பேசுகையில் உறுப்பினர்களின் அனைத்து கோரிக்கைகளும் நிதி நிலைக்கேற்ப படிப்படியாக நிறைவேற்றப்படும். கூட்டத்திற்கு வராத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் என்றார்.

Tags:    

Similar News