கோத்தகிரி அருகே மாரியம்மன் கோவில் திருவிழா
- விநாயகர் வழிபாடு, அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
- திருவிழாவில் ஏராளமான கிராம மக்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.
அரவேணு:
கோத்தகிரி அருகே உள்ள குமரன் காலனி மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வருடந்தோறும் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.
இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்றுமுன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து விநாயகர் வழிபாடு, அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
திருவிழாவின் முக்கிய நாளான நேற்று அலகு குத்துதல் மற்றும் பால்குட ஊர்வலம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று அலகு குத்தியும், பால்குடம் மற்றும் காவடி மற்றும் பறவைக்காவடி ஏந்தியும் ஊர்வலமாக மாரியம்மன் கோவிலுக்கு வந்தனர்.
பின்னர் அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டு அலங்கார பூஜை நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த திருவிழாவில் ஏராளமான கிராம மக்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர் சிறப்பாக செய்திருந்தனர்.