ஆத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் தற்காப்புக் கலைப் பயிற்சி
- ஆத்தூரில் பெண் குழந்தைகளுக்கு தற்காப்புக் கலைப் பயிற்சி நடைபெற்றது.
- தற்காப்புக் கலைப்பயிற்சியின் அவசியம் குறித்து மாணவிகளிடம் எடுத்துரைக்கப்பட்டது.
ஆத்தூர்:
ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மாநிலத் திட்ட இயக்குனர் உத்தரவின் பெயரில், தூத்துக்குடி மாவட்ட கலெக்டரின் ஆணைக்கிணங்க, தூத்துக்குடி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் வழிகாட்டுதலின்படி, ஆழ்வார்திருநகரி ஒன்றியம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆத்தூரில் 6, 7 மற்றும் 8-ம் வகுப்பு படிக்கும் பெண் குழந்தைகளுக்கு தற்காப்புக் கலைப் பயிற்சி நடைபெற்றது.
இப்பயிற்சியில் மாணவிகள் தாங்கள் வெளியே செல்லும் பொழுதும், வரும்பொழுதும் தங்களை தாமே தற்காத்துக் கொள்வதற்காக உரிய பயிற்சி வழங்கப்பட்டது.
மேலும் பயிற்சி மூலம் மாணவிகளுக்கு தன்னம்பிக்கை, எவற்றையும் எதிர்கொள்ளும் விதம், வகுப்பறையில் பாடங்களை உற்று நோக்கி கவனித்தல் போன்ற திறன்கள் வளரும் என்று தற்காப்புக் கலைப் பயிற்றுனர் வேல்முருகன் கருத்துக்கள் வழங்கி பயிற்சியினை மேற்கொண்டார்.
பெண் கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கூடலிங்கம் தலைமையிலும், பள்ளி தலைமை ஆசிரியர் அன்னலட்சுமி முன்னிலையிலும் பயிற்சி நடைபெற்றது. தற்காப்புக் கலைப்பயிற்சியின் அவசியம் மற்றும் முக்கியத்துவம் குறித்து பள்ளி தலைமை ஆசிரியர் மாணவிகளிடம் எடுத்துரைத்தார். பயிற்சியில் 30-க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். பயிற்சியின் போது ஆசிரியர் புனிதா உடன் இருந்தார்.