சோலூர்மட்டம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மருத்துவ உபகரணங்கள்
- கெங்கரை ஊராட்சி மன்ற தலைவர் முருகன் தலைமை தாங்கினார்.
- சிக்கிள் செல் அனீமியா நோயைத் தடுக்கும் வகையில் பழங்குடியின மக்கள் 50 பேருக்கு ஊட்டச் சத்து பெட்டகங்கள் வழங்கப்பட்டன.
ஊட்டி,
சோலூர்மட்டம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த சுமார் 30- க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சென்று சிகிச்சைப் பெற்று பயனடைந்து வருகின்றனர்.
இதனால், கெங்கரை ஊராட்சி மற்றும் சமூக நல கூட்டமைப்பின் மூலம் சுகப்பிரசவத்தை முன்னெடுக்கும் விதமாக பல்வேறு மருத்துவ உபகரணங்கள் வழங்க முடிவு செய்யப்பட்டது.
இதற்கான. நிகழ்ச்சி சோலூர் மட்டம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்றது. கெங்கரை ஊராட்சி மன்ற தலைவர் முருகன் தலைமை தாங்கினார். கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய தலைவர் ராம்குமார், தனியார் எஸ்டேட் நிர்வாக இயக்குனர் சிவக்குமார் பொன்னுசாமி, கீழ் கோத்தகிரி ஸ்டீபன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
சமூக நல கூட்டமைப்பின் நிர்வாகி முகம்மது பாருக் மக்களுக்கு சுகப்பிரசவம் குறித்து விளக்கிப் பேசினார். கனடா நாட்டிலிருந்து வந்திருந்த சமூக ஆர்வலர் இக்பால் அலி மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் முருகன் ஆகியோர் இணைந்து இ.சி.ஜி எந்திரம், சக்கர நாற்காலி உள்பட ரூ. 3 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை டாக்டர் ரம்யாதேவியிடம் வழங்கினர்.
தொடர்ந்து சிக்கிள் செல் அனீமியா நோயைத் தடுக்கும் வகையில் பழங்குடியின மக்கள் 50 பேருக்கு ஊட்டச் சத்து பெட்டகங்கள் வழங்கப்பட்டன. இதில் ஊராட்சி மன்ற துணை தலைவர் பாபு, விவேக், ஆசிரியர் தர்மராஜ், நம் சந்தை உழவர் உற்பத்தியாளர் குழு தலைவர் சண்முகநாதன் மற்றும் மருத்துவத்துறை ஊழியர்கள், செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.